ஊடகவியலாளர்களின் நலன்களை பேணும் திட்டத்தை முன்மொழிந்து அவர்களை தொழில் ரீதியாக வலுப்படுத்துவதற்கு முடியுமான ஒத்துழைப்புகளை வழங்குவேன் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட பொதுத் தேர்தல் வேட்பாளர் றிஸ்லி முஸ்தபா தெரிவித்தார்.
தனது கல்முனை அலுவலகத்தில் இன்று (10) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றும்போது,
காலாகாலமாக அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் மற்றும் நாட்டுக்கும் பல்வேறு சேவைகளை செய்து வருகின்ற ஊடகவியலாளர்கள் தங்களது கணினி கருவிகள் மற்றும் புகைப்படக் கருவிகள் உட்பட சகல தேவைகளையும் பூரணமாக பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் போதுமான வருமானம் அற்றவர்களாக காணப்படுவது என பல்வேறுபட்ட பொருளாதார ரீதியான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதை நான் அறிவேன்.
அதுமட்டுமல்லாது உயிர் அச்சுறுத்தல்கள் மற்றும் உடமைகள் சேதம் என்று உண்மைகளை எழுதுகின்ற ஊடகவியலாளர்களுக்கு மத்தியில் கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் பல்வேறுபட்ட விடயங்களை செய்தமையால் ஊடகத்துறையை ஜனநாயக அடிப்படையிலே செய்வதற்கு ஊடகத்துறையினருக்கு பெரும் அச்சுறுத்தல் காணப்பட்டது.
இந்நிலையை மாற்றி ஊடகவியலாளர்களுக்கு போக்குவரத்துக்கான மோட்டார் சைக்கிள் வழங்குதல், காப்புறுதி திட்டம், அவர்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கான பல்வேறு திட்டங்களை முன்மொழிவதற்கு நான் தயாராக இருக்கின்றேன். எதிர்காலத்திலே நான் அதிகாரத்துக்கு வருகின்ற போது ஊடகவியலாளர்களின் பல்வேறுபட்ட தேவைகளையும் உணர்ந்தவனாக செயல்படுவேன் என்றார்.