மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி கணவனும், மனைவியும் மரணம்..!

முந்தல்  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 412 ஏக்கர் கிராமத்தில் நேற்று(29) இரவு மின்சாரம் தாக்கி கணவனும்,மனைவியும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முந்தல், 412 ஏக்கர் பகுதியைச் சேர்ந்த சேனநாயக்க ஆராச்சிலாகே ஸ்டான்லி திலகரத்ன(வயது 55) மற்றும் மாரசிங்க ஆராச்சிலாகே சந்திரிகா மல்காந்தி (வயது 52) ஆகிய மூன்று பிள்ளைகளின் தாய், தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டிலுள்ள தண்ணீர் இரைக்கும் இயந்திரத்திற்கு பொருத்தப்பட்ட மின்கம்பி எரிந்து அதிலிருந்து புகை வெளியாகுவதை அவதானித்த பெண்னொருவர் இதுபற்றி அந்த நபரிடம் கூறியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, குறித்த நபர் அந்த மின்கம்பியை அகற்றுவதற்கு முற்பட்ட போது மின்சாரம் தாக்கியுள்ளது எனக் கூறப்படுகிறது. 

கணவன் மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளானதை அவதானித்த அவரது மனைவி, அவரை காப்பாற்றுவதற்காக முற்பட்ட போது மனைவியும் மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளானதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இவ்வாறு மின்சாரத் தாக்குதலுக்குள்ளான நிலையில் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரையும் அங்கிருந்தவர்கள் உடடினயாக முந்தல் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், இருவரும் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, இரண்டு சடலங்களும் முந்தல் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிசாம் மரண விசாரணையை நடத்தியதுடன்,மின்சாரம் தாக்கியமையால்  ஏற்பட்ட திடீர் மரணம் எனத் தீர்ப்பு வழங்கிய நிலையில் இரண்டு சடலங்களையும் மகனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

நாட்டில் தற்போது காணப்படும் அசாதாரண நிலைமை காரணமாக வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களிலும் நீர் நிரம்பி காணப்படுகிறது.

எனவே, இந்த சந்தர்ப்பத்தில் தண்ணீர் மோட்டர் உட்பட மின்சார பாவனைகள் தொடர்பில் பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி  பதுர்தீன் முஹம்மது ஹிசாம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *