சிறப்புரிமைகளை அனுபவிக்கும் ஆளுங்கட்சி எம்.பி.க்கள்; மக்களை ஏமாற்றிய அநுர அரசு..! குற்றம்சாட்டும் முஜிபுர்

 

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அளவுக்கதிகமாக சிறப்புரிமைகளை அனுபவித்து வருவதாக தேர்தல் மேடைகளில் பிரசாரங்களை மேற்கொண்ட தேசிய மக்கள் சக்தியின் எம்.பி.க்களில் பெருமளவானோர் இன்று உத்தியோகபூர்வ இல்லங்களுக்கு விண்ணப்பித்திருக்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், 

தேர்தல் பிரசாரங்களின் போது தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் தொடர்பில் பரவலாகப் பேசியது. 

இவற்றை அடிப்படையாகக் கொண்டு மக்கள் மத்தியில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது கடும் கோபத்தையும் ஏற்படுத்தியது. 

சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரையும் மக்கள் இம்முறை தேர்தலில் புறக்கணித்தமையில் இக்காரணி பாரியளவில் செல்வாக்கு செலுத்துகிறது.

ஆனால் தற்போது தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்த பின்னர் அன்று தேர்தல் மேடைகளில் கூறிய அனைத்தையும் மறந்து, பெருமளவான ஆளுங்கட்சி எம்.பி.க்கள் உத்தியோகபூர்வ இல்லங்களுக்காக விண்ணப்பித்துள்ளனர். 

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புரிமைகள் எந்த வகையிலும் குறைக்கப்படவில்லை என பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இவற்றை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் போது தமக்கான வாக்குகளை அதிகரித்துக் கொள்வதற்காக தேசிய மக்கள் சக்தி மக்களை ஏமாற்றியிருக்கிறது என்பது தெளிவாகிறது.

ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து பயணிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு இருதரப்பிலும் காணப்படுகிறது. 

ஆனால் எவ்வாறு இணைந்து செயற்படுவது தொடர்பில் பேசித் தீர்மானிக்க வேண்டியுள்ளது. இரு கட்சிகளிலும் பெரும்பாலானோர் இணைந்து செயற்படவே விரும்புகின்றனர். 

ஆனால் ஐக்கிய தேசிய கட்சியில் ஒரு சிலர் அதனை விரும்பவில்லை. அவர்கள் இந்த இணைவுக்கு எதிராகவே செயற்பட்டு வருகின்றனர்.- என்றார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *