சீனி மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவே இறக்குமதியாகும் வெள்ளைச் சீனிக்கு வரி நீக்கப்பட்டு உள்நாட்டு உற்பத்தியான சாம்பல் நிற சீனிக்கு வரி விதிக்கப்பட்டதாக கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
இன்று (6) பாராளுமன்றில் பாராளுமன்ற உறுப்பினர் ருவான் திலக ஜெயக்கொடி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பல்வத்த சீனிக் கூட்டுத்தாபனத்தில் விற்பனை செய்யமுடியாமல் 23,000 மற்றிக் தொன் சீனி காணப்படுகின்றது. அதே போல களஞ்சியப்படுத்தப்பட்டிருக்கின்ற எதனோல் உம் செவனகல பகுதியில் காணப்படுகின்றது.
இதனால் பல்வத்த செவனகல இரண்டு பகுதிகளும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன. நேற்றைய தினமும் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
பல்வேறு பிரச்சினைகள் எழுந்திருக்கின்றன. அது தொடர்பில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறதா என ருவான் திலக ஜெயக்கொடி கேவியெழுப்பியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி தெரிவிக்கையில்,
அங்குள்ள பிரச்சினை என்னவென்றால் எமக்கு தொழிற்சாலையை முன்னெடுத்துச் செல்லமுடியாத நிலைமை காணப்படுகின்றது. காரணம் இலங்கைக்கு கொண்டுவரப்படுகின்ற வெள்ளை சீனிக்கு வரி அறவிடப்படுவதில்லை.
எனினும் இலங்கையில் உற்பத்தி செய்யப்படுகின்ற சாம்பல்நிற சீனிக்கு 18 வீத வரி அறவிடப்படுகிறது. அதோடு இன்னமும் 2 சதவீதம் சேர்த்துதான் சந்தைக்கு வழங்கப்பட வேண்டி இருக்கிறது
எனவே தொழிற்சாலையிலிருந்து வெளியே வரும் போது சாம்பல் நிற சீனி 300 ரூபாயாக விற்கவேண்டி இருக்கிறது. ஆனால் வெள்ளை நிற சீனி 220 ரூபாவுக்கு விற்கப்படுகிறது. மக்கள் மத்தியில் வெள்ளை நிற சீனி சிறந்தது, சாம்பல் நிற சீனி சரி இல்லை என்ற கருத்து உள்ளது.
ஆகவே நாங்கள் ஒரு வேண்டுகோள் முன்வைக்க விரும்புகிறோம். எதிர்வரும் வாரத்தில் அமைச்சரவையில் ஒரு குறிப்பாணையை முன்வைத்து சாம்பல் நிற சீனியின் வரியை நீக்குமாறு நாம் கோரிக்கை விடுக்கவிருக்கிறோம்.
சாம்பல் நிற சீனியின் வரியை நீக்கினால் ஒரே மட்டத்தில் எமக்கு போட்டியிட முடியும். விலை மாற்றம் ஏற்படாது. எனவே நியாயமான விலையில் இதனை விற்பனை செய்ய முடியும். தற்பொழுது இலங்கையில் ஒரு லட்சத்து முப்பதாயிரம் மெட்ரிக் டன் சீனி தேவைப்படுகிறது.
தற்போதுள்ள மூன்று தொழிற்சாலைகள் இதனை எழுபதாயிரம் மெட்ரிக் தொன்னாக உற்பத்தி செய்ய முடியும் மேலதிக அளவைத்தான் நாங்கள் இறக்குமதி செய்ய வேண்டும்.
ஆனால் எல்லாம் தலைகீழாகத்தான் நடந்து வருகிறது. சாம்பல் நிற சீனி அத்தியாவசியமற்ற பொருளாகவும் வெள்ளைச் சீனி அத்தியாவசிய பொருளாகவும் மாற்றப்பட்டிருக்கிறது. இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள் அத்தியாவசியமற்ற பொருளாக்கப்பட்டிருக்கிறது
விசேடமாக சீனி மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதனை சரிப்படுத்த வேண்டும்.
அதற்க்கு முன்னர் தேங்கியுள்ள சீனியை சந்தைக்கு கொண்டுவருவோம் . அதற்கு கட்டாயமாக வரி நிவாரணம் தேவைப்படுகிறது . அமைச்சரவையில் இதற்கு தீர்வுகாண முயற்சிக்கின்றோம் என்று தெரிவித்தார்.