இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்படியில் ஈடுபட்டு வரும் இந்திய மீனவர்கள் தொடர்பில் இந்தியா செல்லும் எமது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இந்தியா பிரதமருடன் பேசி முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனத் தலைவர் அந்தோணிப் பிள்ளை மரியதாஸ் கோரிக்கை விடுத்தார்.
நேற்று செவ்வாய்க்கிழமை யாழ் மாவட்ட கூட்டுறவு சமாசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்திய அத்துமீறிய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் தொடர்ச்சியாக பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.
நாம் பலமுறை இந்திய தூதரகம் இலங்கை அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்தம் இந்திய அத்துமீறிய இழுவை படகுகள் தொடர்ச்சியாக நமது கடற்பரப்புக்குள் நுழைந்து எமது வாழ்வாதாரங்களை அழித்து வருகின்றன.
இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முதல் பயணமாக எதிர்வரும் வாரம் இந்தியா செல்ல உள்ளதாக அறிகிறோம்.
இந்திய இழுவமடி படகுகளினால் எமது மீனவர்கள் தொடர்ச்சியாக பாதிப்புக்கு உள்ளாகி வருவதை இலங்கை ஜனாதிபதியும் கடற்தொழில் அமைச்சரும் நன்கு அறிவார்கள்.
மேலும் முன்னாள் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ் மாவட்ட மீனவர்களுக்கு வழங்குவதாக தெரிவித்த வலைகள் இதுவரை வழங்கவில்லை.
குறித்த விடயம் தொடர்பில் புதிய கடற்தொழில் அமைச்சர் சந்திர சேகரனுக்கு தெரிவித்த நிலையிலும் இதுவரை மீனவர்களுக்கு வழங்கப்படவில்லை.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் கடை தொழில் அமைச்சர் உரிய கவனம் எடுத்து தேங்கி கிடக்கும் வலைகளை மீனவர்களுக்கு வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்
ஆகவே எமது மீனவர்களின் நீண்டகால பிரச்சனையான இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய பிரச்சனை இந்திய பிரதமருடனும் ஜனாதிபதியுடனும் பேசி, எமது ஜனாதிபதி அனுர தீர்த்து வைப்பார் என நம்புகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.