குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த முன்னோடித் திட்டம், மாத்தளையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முன்னோடித் திட்டத்திற்காக விவசாய அமைச்சினால் 4.5 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குரங்குகளை கருத்தடை செய்வதற்கு கால்நடை வைத்தியர்களின் உதவிகள் எடுக்கப்படும்.
மேலும், இந்த முன்னோடித் திட்டம் எதிர்காலத்தில் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த நாட்டில் 25-30 இலட்சம் குரங்குகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக சுற்றாடல் பிரதி அமைச்சர் புவியியலாளர் என்டன் ஜெயக்கொடி தெரிவித்தார்.
இந்நிலையில் புத்தளம் வேப்பமடு மொஹிதீன் நகர் பகுதியில் குரங்களினால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
குரங்குகள் வீட்டின் கூரைகளை சேதப்படுத்துவதாகவும், வீடுகளில் வைக்கப்படுகின்ற பொருட்களை சேதப்படுத்துகின்றதாகவும், பொருட்களை தூக்கிக் கொண்டு செல்வதாகவும், தென்னை மரங்களில் காய்க்கின்ற குரும்பைகளை பிஞ்சிலே நாசம் செய்வதாகவும் மரங்களில் காய்க்கின்ற பழங்களை பரித்து நாசம் செய்வதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
குரங்குகளை விரட்டுவதற்கு முற்பட்டால் சீரிப் பாய்கிறதாகவும், கடிக்க வருவதாகவும் இதனால் மக்கள் அச்சமடைகின்றதாக தெரிவிக்கின்றனர்.
குரங்குகளை விரட்டுவதற்காக பல அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதற்கான தீர்வுகள் இதுவரையிலும் கிடைக்கெப்பெறவில்லையென்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.