எங்காவது செல்லும் போது வாந்தி வருகிறதா? இதுதான் காரணம்

பயணத்தின்போது ஒரு சிலருக்கு வாந்தி மற்றும் குமட்டல் ஏற்படுவது ஒரு சவாலான அனுபவம். அதிலும் குறிப்பாக நீண்ட பயணங்களின்போது பலர் இதனை அனுபவிப்பார்கள். எவ்வளவு மருந்துகள் எடுத்துக் கொண்டாலும் இந்த ஒரு விஷயத்தை சரி செய்ய முடியவில்லை என்று வருத்தப்படுபவர்கள் ஏராளம். எனினும் பயணத்தின்போது வாந்தி அல்லது குமட்டல் ஏதும் ஏற்படாமல், உங்களுடைய பயணத்தை ஜாலியாக அனுபவிப்பதற்கு உதவும் ஒரு சில அற்புதமான யுத்திகளை தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.

முன்னிருக்கையில் அமரவும்: பயணத்தின்போது குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படுவதை தவிர்ப்பதற்கு நீங்கள் வாகனத்தின் முன்னிருக்கையில் அமர்ந்து கொள்வது அதனை தடுப்பதற்கான ஒரு சிறந்த வழியாக அமைகிறது. வாகனத்தில் நீங்கள் பயணிக்கும்போது, முன் இருக்கையில் நேராக நிமிர்ந்து உட்கார்ந்து இருக்கும்போது, சாலையில் நடக்கும் திசை மாற்றங்களை நீங்கள் கவனிக்க வேண்டும். இவ்வாறு செய்வது கண்கள் மற்றும் உட்புற காதுகளில் இருந்து மூளைக்கு செல்லும் சிக்னல்களில் சிக்கல் ஏற்படுவதை தவிர்த்து அசௌகரியத்தை குறைக்கும். நம்முடைய உடலில் உட்புற காது என்பது சமநிலைக்கு மிகவும் முக்கியமானது. நீங்கள் பார்ப்பதற்கும், உங்கள் உடல் உணர்வதற்கும் எதிர் எதிர்விதமான தகவல்கள் இருந்தால், அதன் காரணமாக குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படலாம்.

செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்தல்: வாகனத்தை ஓட்டுபவர்கள் கட்டாயமாக செல்போன் பயன்படுத்தக்கூடாது என்பது நமக்குத் தெரியும். ஆனால் வாகனத்தில் அமர்ந்திருப்பவர்களும் அதனை தவிர்ப்பது குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படுவதை தடுக்க உதவும். போனில் கவனம் செலுத்துவது அல்லது படிப்பது குமட்டலை ஏற்படுத்தும். ஏனெனில் ஸ்கிரீனில் ஏற்படும் விரைவான அசைவுகள் உங்களுடைய உட்புற காதை குழப்பமடையச் செய்யும். எனவே சோஷியல் மீடியாவை ஸ்க்ரோல் செய்வதற்கு பதிலாக அல்லது புத்தகம் வாசிப்பதற்கு பதிலாக பயணத்தின்போது இயற்கையை ரசித்தபடி செல்லுங்கள்.

பயணத்திற்கு முன்பும், பயணத்தின்போதும் குறைவாக சாப்பிடுவது: நீங்கள் ஒரு பயணத்திற்கு முன்பு என்ன சாப்பிடுகிறீர்கள் என்பது குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படுத்துவதில் முக்கிய தாக்கத்தை கொண்டுள்ளது. அளவுக்கு அதிகமான அல்லது எண்ணெய் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது குமட்டலை அதிகரிக்கும். எனவே எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை சாப்பிடுவது நல்லது. ஒருவேளை உங்களுக்கு பயணத்தின்போது மோசமான குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படுமென்றால் உணவு சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்ப்பது இன்னும் சிறந்தது.

உடல் அசைவுகளை கட்டுப்படுத்துதல்: உங்களுடைய உடல் அசைவை கட்டுப்படுத்தும்போது உங்களுக்கு ஏற்படும் அசௌகரியத்தை நீங்கள் குறைக்கலாம். வாகனம் வளையும்போது, உங்கள் உடலும் அதனோடு சேர்ந்து வளைவது உங்களுக்கு மயக்கத்தை ஏற்படுத்தும். எனவே நிலையாக அமர்ந்து உங்களுக்கு ஆதரவு தரக்கூடிய வகையில் இருக்கும் ஒரு இருக்கையில் அமர்ந்து கொள்ளுங்கள். பிடிகளை கெட்டியாக, பாதுகாப்பாக பிடித்துக் கொள்ளுங்கள். முன்னும் பின்னும் வந்து போவதை தவிர்ப்பது நல்லது.

வேறு விஷயங்களில் ஈடுபடுத்திக் கொள்ளுதல்: பயணத்தின்போது குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படுவதை தவிர்ப்பதற்கு நீங்கள் உங்களை வேறு வேறு விஷயங்களில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அருகில் அமர்ந்திருப்பவர்களுடன் பேசுவது, இசை கேட்பது போன்றவற்றில் உங்கள் கவனத்தை திசை திருப்புங்கள். இது பயணத்தின்போது ஏற்படும் அசௌகரியத்திலிருந்து தப்பிப்பதற்கு உதவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *