கொழும்பு – யாழ்ப்பாணம் இடையேயான போக்குவரத்து சேவையில் ஈடுபடுவதாக காட்சிப்பலகை காட்சிப்படுத்தப்பட்ட பேருந்துகள் சில பயணிகளை தொடர்ச்சியாக ஏமாற்றி வருகின்றன.
இந்த விடயம் குறித்து மேலும் தெரியவருகையில், கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையே போக்குவரத்து சேவையில் ஈடுபடுவதாக சில பேருந்துகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ஆனால் அந்த பேருந்துகளில் யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் பயணிகள் மதவாச்சி அல்லது வவுனியா பகுதிகளில் இறக்கி விடப்படுகின்றனர்.
இவ்வாறு இறக்கி விடும்போது “பின்னால் வேறு பேருந்து வருகின்றது. நீங்கள் அந்தப் பேருந்தில் யாழ்ப்பாணத்துக்கு பயணிக்கலாம்.
அந்த பேருந்துக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை” என கூறப்படுகிறது.
கொழும்பில் இருந்து பயணச் சீட்டுகள் யாழ்ப்பாணத்திற்கு என பதிவு செய்யப்பட்ட பின்னர் சிலவேளைகளில் கொழும்பில் இருந்து வவுனியா அல்லது மதவாச்சி பகுதிக்கான கட்டணத்தை மாத்திரம் பெற்றுக்கொண்டு மிகுதி பணம் மீளவும் பயணிகளிடம் வழங்கப்படுகின்றது.
பயணிகள் அடுத்த பேருந்து வரும் வரைக்கும் காத்திருக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது.
அத்துடன் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான பயணப்பாதை கொழும்பு, நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம், அநுராதபுரம், வவுனியா, கிளிநொச்சி ஊடாக யாழ்ப்பாணம் என்றே காணப்படுகிறது.
ஆனால், இவ்வாறு இடையில் இறக்கி விடுகின்ற பேருந்துகளின் பயணப்பாதையானது கொழும்பு, குருணாகல் தம்புள்ளை ஊடாக மதவாச்சி அல்லது வவுனியா வரை செல்கிறது. இந்த பயணப்பாதையானது மிக நீண்ட தூரமாகும்.
இன்றையதினம் (22) கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு செல்வதற்காக பயணிகள் சிலர் ND-0632 என்ற இலக்க தனியார் பேருந்தில் ஏறி பயணத்தை ஆரம்பித்தனர்.
அவர்களுக்கு வழங்கப்பட்ட பயணச்சீட்டில் கொழும்பு – வவுனியா என சிங்களத்தில் எழுதப்பட்டிருந்தது என்பதுடன் 1763 ரூபா கட்டணம் அறவிடப்படப்பட்டது.
ஆனால் அந்த பேருந்தில் கொழும்பு – யாழ்ப்பாணம் என்றே காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
பின்னர் அந்த பேருந்து யாழ்ப்பாணம் செல்லாது என்று பேருந்தின் நடத்துனர் கூறியதுடன், அந்த பேருந்தில் பயணித்த பயணிகள் பயணித்த வவுனியாவுக்கும் மதவாச்சிக்கும் இடைப்பட்ட பகுதியில் வைத்து வேறு ஒரு அரச பேருந்தில் ஏற்றி வைக்கப்பட்டனர்.
இந்த பேருந்தில் பயணித்த பயணிகள் கொழும்பில் இருந்து வவுனியாவரை 7 மணித்தியாலங்களும், வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணிக்க இரண்டரை மணித்தியாலங்களும் என மொத்தமாக 9 1/2 மணித்தியாலங்கள் செலவழிக்க வேண்டி ஏற்பட்டது. ஆனால் யாழ்ப்பாணம் – கொழும்பு இடையே பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் உண்மையான பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் 7 அல்லது 7 1/2 மணத்தியாலங்களே பயணத்திற்கு செலவிட வேண்டிய தேவை உள்ளது.
மேற்படி மோசடியில் ஈடுபடும் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் தேவையற்று நேரத்தை செலவழிக்க வேண்டிய தேவை ஏற்படுவதுடன் சில பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் தமது பணத்தையும் இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
இந்த செயற்பாடுகள் உரிய அதிகாரிகளுக்கு தெரிந்து நடக்கின்றதா அல்லது தெரியாமல் நடக்கின்றதா என்ற கேள்விகள் மக்களுக்கு எழுகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்னரும் இவ்வாறான ஒரு சம்பவம் ஊடகங்களில் செய்தியாக வெளிவந்த நிலையிலும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பது போல தெரியவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.