சிறிய மற்றும் நடுத்தர அவிலான வணிகங்களுக்கு மின் கட்டண நிவாரணம் வழங்கும் திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பு நடாத்தவுள்ள உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றையதினம்(23) காலை 10 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இச் செயலமர்வில் தலைமையுரையாற்றிய யாழ்ப்பாண மாவட்ட செயலாளர்,
சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் உத்தியோகத்தர்களின் கடமைகள் திருப்திகரமாகவுள்ளதாகவும், மனித வாழ்க்கைக்கு பொருளாதாரவிருத்தி முக்கியமானது எனவும், இத் திட்டத்தின் மூலம் பல குடும்பங்களின் வாழ்க்கை மென்மேலும் ஒளிமயமாகும் எனக் குறிப்பிட்டதுடன், சரியான பயனாளிகளை தெரிவு செய்வது உத்தியோகத்தர்களின் பொறுப்பு எனவும் தெரிவித்தார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் அனுசரணையில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிகங்களுக்கு மின் கட்டணத்தில் நிவாரணம் வழங்கும் திட்டத்தில் அகில இலங்கை ரீதியாக தெரிவு செய்யப்பட்ட 09 மாவட்டங்களில் யாழ்ப்பாண மாவட்டமும் உள்ளடங்கப்பட்டுள்ளது. இச் செயற்றிட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 1,050 முயற்சியாளர்கள் ஆய்வுக்குட்படுத்தப்படவுள்ளார்கள்.
இச் செயலமர்வில் விசேடமாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆலோசகர் உபாலி தரணகம மற்றும் கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட ஆய்வாளர் நாமல் வீரசேன ஆகியோர் பங்குபற்றி உத்தியோகத்தர்களுக்கு பயனாளிகளை எவ்வாறு தெரிவு செய்வது தொடர்பான தெளிவூட்டல்களை வழங்கினார்கள்.
சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் உதவிப் பணிப்பாளர் தி. தனஞ்சயன் மற்றும் மாவட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.