67 பேருடன் பயணித்த அசர்பைஜான் விமானம் ஒன்று புதன்கிழமை (25) கஜகஸ்தானின் அக்டாவ் நகருக்கு அருகில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த குறைந்தது 38 பேர் உயிரிழந்ததாக கசாக் அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.
ஒரு விரிவான மீட்பு நடவடிக்கையில், இரண்டு குழந்தைகள் உட்பட 29 உயிர் பிழைத்த நிலையில் மீட்க்கப்பட்டதாகவும் கஜகஸ்தானின் துணைப் பிரதமர் கனாட் போசும்பாயேவ் (Kanat Bozumbayev) தெரிவித்துள்ளார்.
அவர்களில் 11 பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அசர்பைஜான் ஏர்லைன்ஸின் J2-8243 என் விமானம், அசர்பைஜான் தலைநகர் பாகுவிலிருந்து ரஷ்ய பிராந்தியமான செச்சினியாவில் உள்ள க்ரோஸ்னிக்கு பயணம் செய்து கொண்டிருந்தது.
எனினும், அது அக்டாவிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் (1.8 மைல்) தொலைவில் அவசரமாக தரையிறங்க முயற்சித்த போது விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது.
விபத்தில் உயிர் பிழைத்த அனைவரும் அவசர மீட்பு பணிகள் மூலமாக வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்று கசாக் அதிகாரிகள் முன்னதாக தெரிவித்தனர்.
உயிர் பிழைத்தவர்களில் எவரும் கசாக் நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று துணைப் பிரதமர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், ஒரு தேடல் குழு விமானத்தின் கருப்பு பெட்டியை கண்டுபிடித்துள்ளதாக அசர்பைஜான் அரச செய்தி நிறுவனம் AZERTAC தெரிவித்துள்ளது.
மேலும் விபத்துக்கான காரணத்தை விசாரிக்கவும் பயணிகளின் குடும்பங்களுக்கு உதவவும் கஜகஸ்தான் அரசாங்கம் ஒரு ஆணைக்குழுவை அமைத்துள்ளது.
விசாரணையில் அசர்பைஜானுடன் அரசாங்கம் ஒத்துழைக்கும் என்றும் அது கூறியது.
விபத்து குறித்து வெளியோன வீடியோவில், விமானம் விபத்துக்கு முன் விமானநிலையத்தை தவறாக சுற்றி வந்தது. தரையில் மோதியவுடன், விமானம் தீப்பிடித்து எரிந்தது, சிறிது நேரத்தில் இடிபாடுகளில் இருந்து இரத்தம் தோய்ந்த பயணிகள் வெளியே வந்ததை காட்டுகின்றது.