வடக்கு மாகாண ரீதியாகவும், மாவட்ட ரீதியாகவும் சுகாதாரம் தொடர்பில் எதிர்கால திட்டமிடல் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா போட்டுடைத்த நிலையில் சுகாதார தரப்பு அதனை ஒப்புக் கொண்டுள்ளது.
கிளிநொச்சியில் இன்று(26) இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் சுகாதாரம் தொடர்பில் குறித்த விடயம் பேசப்பட்டது.
இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளரை நோக்கி ‘மாகாணம் தழுவிய எதிர்கால திட்டமிடல் உள்ளதா என கேள்வியெழுப்பியபோது இல்லை என பதிலளித்தார்.
வைத்தியசாலை தொடர்பான எதிர்கால திட்டங்கள் தொடர்பில் கேட்ட போது அவை உள்ளதாக தெரிவித்தார்.
சில இடங்களில் 2035 வரையான எதிர்கால திட்டங்கள் வரையப்பட்டுள்ள நிலையில் நாங்கள் மாகாண ரீதியிலும், மாவட்ட ரீதியிலும் எதிர்கால திட்டமிடல் இல்லாமல் அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்களை பேசுகிறோம்.
இது ஆரோக்கியமானதாக இருக்காது. வைத்தியசாலை திட்டங்கள் வர்ணம் பூசுதல் போன்ற சாதாரண திட்டங்களுடன் முடிந்துவிடும். அதற்கான திட்டங்களை நாங்கள் தயாரிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்தார்.
மேலும், எம்மை மக்கள் பிரதிநிதிகளாக கருதாமல், துறை சார்ந்தவர்கள் எனும் அடிப்படையில் குறித்த எதிர்கால திட்டங்களை தயாரிக்க எங்களையும் உள்ளடக்க வேண்டும் என கோருகிறேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
எதிர்கால திட்டம் இல்லை என்பது கவலையான விடயம் என அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்தார். நாங்கள் அவ்வாறான திட்டங்களை மாகாண ரீதியில் தயாரிக்க வேண்டும். அதன் மூலமே நாங்கள் இலக்கை அடைய முடியும்.
நான் இந்த சபையில் ஒரு விடயத்தை கூறுகின்றேன். இந்த திட்ட வரைவுகளுக்கு அர்ச்சுனா போன்றவர்களையும் உள்ளடக்க எந்த தடையும் இல்லை. அவர்களையும் இணைத்து மாகாணத்துக்கான எதிர்கால திட்டமிடல்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
குறித்த திட்ட வரைவை விரைவில் தயாரித்து தருவதாக இதன்போது வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் தெரிவித்தார்.
மிக குறுகிய காலத்திற்குள் அந்த திட்ட வரைவை தயாரிப்பதாகவும் இதன் போது உறுதியளித்தார்.
இதே வேளை, இங்குள்ள மக்கள் பிரதிநிதிகள் மக்கள் சேவையை மையமாகக் கொண்டு எங்கும் செல்ல முடியும். அவ்வாறு சென்று குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், சுமுகமான முறையில் இது நடந்து கொள்ள வேண்டும் எனவும், வீண் சிக்கல்களுக்குள் மாட்டக்கூடாது எனவும் அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்த போது சபையில் சிரிப்பு சத்தம் எழுந்ததுடன் குறித்த கூட்டம் நிறைவடைந்தது.