திருவெம்பாவை விரதத்தை முன்னிட்டு இலங்கை சைவமகாசபையின் வருடாந்த ஈழத்துச் சிதம்பரம் நோக்கிய ஆன்மீகப் பாதயாத்திரை, 11 ஆவது வருடமாக மாதகல் சம்புநாத ஈச்சரர் முன்றலில் இன்று (05) ஆரம்பமாகியது.
சம்பில்துறை சம்புநாத ஈச்சரர் ஆலயத்தில் ஆரம்பமாகிய ஆன்மீகப் பாதயாத்திரை சாந்தை ,பனிப்புலம் , சுழிபுரம், மூளாய்,பொன்னாலை ,காரைநகரில் உள்ள பல்வேறு இந்து ஆலயங்களையும் தரிசித்தவாறு காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தைச் சென்றடைந்தது.
இதன் பொழுது அடியவர்களால் சிவனுக்குரிய பஜனைகள் பாராயணத்துடன் பாதயாத்திரை தரிசித்த ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதோடு , பாதயாத்திரையில் கலந்து கொண்டவர்களுக்கு தன்னார்வலர்களால் தாக சாந்தியும் வழங்கப்பட்டது.
யாத்திரையில் அகில இலங்கை சைவமகாசபையினர் ,தமிழ் சைவ பேரவையினர் , சிவமங்கையர் ,சிவ தொண்டர்கள் , அடியவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




