திடீரென இடிந்து விழுந்த பாரதியார் வீட்டின் மேற்கூரை!

எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் பிறந்த வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியார் பிறந்த இல்லம், செய்தி மக்கள் தொடர்புத் துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இவ்வீட்டில் மகாதேவி என்பவா் காப்பாளராகப் பணியாற்றி வருகிறார். இந்த இல்லம் காலை 9.30 மணிமுதல் பிற்பகல் 1.30 மணிவரையும், பிற்பகல் 2.30 மணிமுதல் மாலை 6 மணிவரையும் பொதுமக்கள் பாா்வைக்கு திறந்து வைக்கப்பட்டிருக்கும். இங்கு பகுதிநேர நூலகமும் செயற்பட்டு வருகிறது. தினமும் சராசரியாக 500-க்கும் மேற்பட்ட நபர்கள் இங்கு வந்து செல்வர். விடுமுறை நாள்களில் பாா்வையாளா்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருக்கும்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு பார்வையாளர்  நேரம் முடிவடைந்தவுடன், வீட்டின் உள்பகுதி கதவுகளை அடைத்த காப்பாளர் மகாதேவி, பின்னர் வெளிப்புறம் உள்ள கதவை மூடிய சிறிது நேரத்தில் திடீரென பாரதியார்  வீட்டின் முன்பக்க மேல்மாடியின் மேற்கூரை இடிந்து விழுந்தது.

இதனால் தரை தளத்தின் மேற்கூரையும் இடிந்து, அதிலிருந்து கற்கள் மரக் கட்டைகள் விழுந்தன. இதன் காரணமாக பாரதியார்  வீட்டின் வரவேற்பு அறையில் இருந்த மேஜை, நாற்காலி, புகைப்படங்கள் உள்ளிட்டவை சேதமடைந்தன. அதிர்ச்சியடைந்த காப்பாளர் மகாதேவி, உடனடியாக மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலருக்கும், வருவாய்த் துறைக்கும் தகவல் அளித்தார்.

இதனையடுத்து எட்டயபுரம் வட்டாட்சியர் சுபா மற்றும் அதிகாரிகள் பாரதியாா் நினைவு வீட்டுக்குச் சென்று பார்வையிட்டதோடு மின்சார சபை ஊழியர்கள் உடனடியாக வந்து, பாரதியாா் வீட்டுக்குச் சென்ற மின் இணைப்பைத் துண்டித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1973ஆம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த மு. கருணாநிதி, எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் பிறந்த வீட்டை அரசு சார்பில் விலைக்கு வாங்கி சி.பா.ஆதித்தனார்.  தலைமையில் 12.5.1973ஆம் திகதி நடந்த விழாவில் பாரதியாா் பிறந்த வீட்டை வரலாற்றுச் சின்னமாக அறிவித்து திறந்து வைத்தாா்.

பாரதியாா் பிறந்த வீட்டில் அவ்வப்போது அரசின் சாா்பில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அதன் பழமை மாறாமல் புராதனமாக பராமரிக்கப்பட்டு வந்தது. இங்கு 4 அறைகள் உள்ளன.

முதல் அறையில், பணியாளா்கள் மட்டுமே இருப்பர்.. அங்கேயே பகுதிநேர நூலகத்துக்கான புத்தகங்கள் உள்ளன. 2ஆவது அறையில், அவா் பிறந்த இடத்தில் மகாகவி பாரதியார் சிலை உள்ளது.

3ஆவது அறையில், பாரதியாா் பயன்படுத்திய பொருள்கள், அவரின் குடும்ப படங்கள் மற்றும் தனிப்பட்ட படங்கள், அவா் பற்றிய செய்தி துணுக்குகள், பாரதியாா் நண்பா்கள் படங்கள், பாரதியின் குடும்ப வம்சாவழி பற்றிய விவரம் உள்ளிட்டவைகள் வைக்கப்பட்டுள்ளன. 4ஆவது அறையில் புத்தகங்கள் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *