பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்காமல் ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையினை இலங்கை அரசாங்கம் பெற்றுக்கொள்ளமுடியாது என இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் மொரினோ தெரிவித்துள்ளார்.
பாத்பைன்டர் நிறுவனத்தினால் கொழும்பில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய தூதுவருடனான வட்டமேசை கலந்துரையாடலிலேயே இந்த விடயம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகை இலங்கைக்கு வேண்டுமானால் ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்திருக்கிற நிபந்தனைகளை இலங்கை பின்பற்றியாக வேண்டும். இணக்கப்பாடுகளை நிறைவேற்றியாக வேண்டும்.
இல்லாவிடின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகை இலங்கைக்கு கிடைக்காமல் போய்விடும் என்று இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் மொரினோ தெரிவித்தார். மேலும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையை இலங்கையே ஐரோப்பிய ஒன்றியத்திடம் கேட்கிறது. எனவே, அந்த சலுகையை கேட்டால் அதற்கேற்றவாறு இலங்கை நடந்துகொள்ள வேண்டும்.
எங்களது நிபந்தனைகளை தளர்த்துமாறு இலங்கை எமக்கு கூற முடியாது. சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் நிபந்தனைகளை தளர்த்துமாறு உங்களால் கூற முடியுமா? …. முடியாது. அதேபோன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளையும் தளர்த்துமாறு கூற முடியாது. உங்களுக்கு இந்த சலுகை வேண்டுமானால் நீங்கள் அதனை நிறைவேற்றியாக வேண்டும். முக்கியமாக பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம்.ஆனால், அரசாங்கம் அதனை நீக்கவில்லை. அந்த சட்டம் இன்னும் பயன்படுத்தப்படுகிறது.
இதற்கு பதிலாக கடந்த அரசாங்கத்தில் உருவாக்கப்பட்ட புதிய சட்டமும் மிக மோசமானதாக இருக்கிறது. எந்த சட்டமும் சர்வதேச சட்டங்களை மரபுகளை பின்பற்றுவதாக அமைய வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் குறிப்பிட்டார். மேலும் ஐரோப்பிய ஒன்றியம் 2027ஆம் ஆண்டிலிருந்து புதிய நிபந்தனைகளையும் விதிக்கவிருக்கிறது. அமெரிக்கா இலங்கைக்கு 44 வீத தீர்வையை விதித்திருக்கின்ற நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையும் முடிவுக்கு வருமானால் இலங்கையை பாரிய நெருக்கடியை சந்திக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த பின்னணியிலேயே ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் இந்த விடயங்களை சுட்டிக்காட்டியிருக்கிறார்.