தமிழ் மொழியில் தண்டப்பத்திரம் கோரிய சாரதிக்கு நடந்த கொடூரம்; வவுனியாவில் பொலிஸாரின் செயலால் பதற்ற நிலை

வவுனியா குருமன்காட்டு சந்தியில் இன்று காலை வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் தமிழ் மொழியில் தண்டப்பத்திரம் கோரிய சாரதியை தலையை பிடித்து இழுத்து கையை பிடித்து அமுக்கி முச்சக்கரவண்டியில் ஏற்ற முற்பட்டமையால் பதற்ற நிலைமை  ஏற்பட்டது.

சம்பவம்  தொடர்பில் தெரிய வருகையில்,

வாகன சாரதியோருவர் வர்த்தக நோக்கத்திற்காக குருமன்காட்டு சந்தியில் வாகனத்தை நிறுத்தியுள்ளார். இதன்போது வாகனத்தை அவ்விடத்திலிருந்து அகற்றுமாறு போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளார்.

எனினும் வர்த்தக நிலையத்திற்கு பொருட்களை இறக்குவதினால் சிறிது நேரம் கால அவகாசம் தருமாறு வாகன சாரதி கோரிய சமயத்தில் போக்குவரத்து பொலிஸார் வாகன திறப்பினை எடுத்துக்கொண்டு சென்றுள்ளனர்.

இதன்போது வாகனத்தினை நிறுத்த தடை செய்யப்பட்ட இடத்தில் வாகனத்தினை நிறுத்தியமை என சிங்கள மொழியில் பொலிஸார் தண்டப்பத்திரம் வழங்கிய சமயத்தில்,

தமக்கு என்ன குற்றம் என தெளிவில்லை, எனவே தமிழ் மொழியில் தண்டப்பத்திரம் கோரியமையினால் வாகன சாரதி – போக்குவரத்து பொலிஸாருக்கிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

அதன் பின்னர் அவ்விடத்திற்கு வருகை தந்த வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி, கடமைக்கு இடையூறு என தெரிவித்து குறித்த வாகன சாரதியினை முச்சக்கரவண்டியில் பொலிஸ் நிலையத்திற்கு ஏற்றி செல்ல முற்பட்ட சமயத்தில் அவ்விடத்தில் பதட்ட நிலமை ஏற்பட்டது.

எந்த தவறும் செய்யாது என்னை எவ்வாறு கைது செய்ய முடியும்.  அவ்வாறு தவறு செய்தால் தண்டப்பத்திரம் தானே வழங்க வேண்டும் என  கூறிய வாகன சாரதி,

முச்சக்கரவண்டியில் ஏற மறுப்பு தெரிவித்தமையடுத்து போக்குவரத்து பொலிஸார் குறித்த வாகன சாரதியினை தலையை பிடித்து இழுத்து கையை பிடித்து அமுக்கி முச்சக்கரவண்டியில் ஏற்றி வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு ஏற்றிச்சென்றனர்.

வாகன சாரதி மீது வவுனியா போக்குவரத்து பொலிஸார் வழக்கு தாக்கல் மேற்கொண்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *