
சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் வருடாந்தம் அதிகரித்து செல்கின்றது. அதனை கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என யாழ். மாவட்ட அரச அதிபர் க. மகேசன் தெரிவித்தார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய நிலையில் ஒவ்வொரு வருடமும் பெண்கள், சிறுவர்கள் துஸ்பிரயோகம் அதிகரித்துச் செல்கின்ற நிலை காணப்படுகின்றது.
ஒவ்வொரு குடும்பத்திலும் இருந்து துஸ்பிரயோகத்தை தடுக்க கூடிய நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டும்.
அவ்வாறு ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கு நாங்கள் முன் வருவோமாக இருந்தால் அது ஏனைய மட்டங்களில் மாற்றத்தை கொண்டுவரும்.
அத்தோடு இந்த சிறுவர் பெண்கள் துஸ்பிரயோகமானது கட்டாயமாகத் தவிர்க்கப்பட வேண்டியதொன்று.
அத்தோடு சமூகத்தில் காணப்படுகின்ற ஏற்றத்தாழ்வுகளையும் ஏனைய பிரச்சினைகளையும் குறைப்பதற்கு ஆரம்பமாக இருக்கும்.
எனவே தற்போதைய சமூகம் எதிர் நோக்குகின்ற பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்தினை ஒழிப்பதற்கு உலகளாவிய ரீதியிலே தக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
குறிப்பாக இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு என தனியான ஒரு அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது. அதே போல மாகாண, மாவட்ட மட்டங்களில் திணைக்களங்கள் கூட செயற்படுகின்றன.
அனைவரும் ஒன்றிணைந்து இந்த பெண்கள் சிறுவர் துஷ்பிரயோகங்களை இல்லாதொழிப்பதற்கு நாம் இன்றைய மகளிர் தின நிகழ்வில் தயாராகவேண்டும்.
சிறுவர் பெண்கள் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.




