
இன்றைய சபை அமர்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கருத்து தெரிவிக்கையில்:
நாடு இப்போது வரிசை யுகத்தில் சென்று கொண்டிருக்கிறது. தவறான கொள்கை வகுப்பால் மட்டுமே இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆளும் கட்சி உறுப்பினர்களே அரசை விமர்சித்து வருகின்றனர். அதனால் அமைச்சுப் பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.
நட்பு ரீதியாக எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டால், மக்கள் அல்லல்படுகின்றனர் நாம் எப்படி நலமாக இருப்போம் என தனிப்பட்ட ரீதியாக அமைச்சர்கள் புலம்பிக்கின்றனர்.
வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்து மீறல் தொடர்பில் அனைவருக்கும் தெரியும். இன்று வரை அந்த பிரச்சினை தீர்க்கப்படவில்லை.
கடற்தொழில் அமைச்சர் டக்ள்ஸ் தேவானந்தா, தீர்ப்போம் தீர்ப்போம் என்கிறார். இன்று வரை எந்தப் பதிலும் இல்லை. இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினையை அமைச்சர் டக்ளஸ் தான் நீடித்து செல்கின்றார். இவர் தான் பிரச்சினைக்கு காரணம். ஆகவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு வேறு ஒரு துறை சார்ந்த அமைச்சரை நியமியுங்கள்.
அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவு நிறுத்தப்படுவதாக சுற்றறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இது தவறான விடயம், பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் சேவை செய்து வரும் அரச அலுவலர்களை வஞ்சிக் கூடாது. ஆகவே குறித்த சுற்றறிக்கையை மீள் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்.- என்றார்.





