
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் மக்களாணைக்கும், கொள்கைக்கும் முரணாக செயற்படுவதால் களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள் மற்றும் கப்பற்துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு பதவியை துறக்க தீர்மானித்துள்ளேன் என பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்தார்.
தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பாரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினோம். அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.
நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளார்கள். பொருளாதார பாதிப்பில் இருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் மீட்பதற்கு நிதியமைச்சு உரிய திட்டங்களை செயற்படுத்தவில்லை.
மக்களின் பிரதிநிதிகள் என்ற காரணத்தினால் மக்களின் பிரச்சினைகளை எம்மால் நன்கு அறிய முடிந்தது. பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் 11 பங்காளி கட்சிகள் ஒன்றினைந்து தேசிய கொள்கை திட்டத்தை கடந்த 2ஆம் திகதி வெளியிட்டனர்.
பங்காளி கட்சிகள் முன்வைத்த யோசனைகள் குறித்து கலந்துரையாடி உரிய தீர்மானத்தை முன்னெடுப்பதை விடுத்து அரசாங்கம் பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோரை அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கியது. இது முற்றிலும் தவறான தீர்மானமாகும்.
ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் மக்களாணைக்கும், கொள்கைக்கும் முரணாக செயற்படுவதால் இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து விலகும் தீர்மானத்தை ஜனாதிபதியிடம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளேன்.
அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் சூழ்ச்சி திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படுகின்றன. சூழ்ச்சியாளர்களின் திட்டத்தை முறியடிப்பது எமது பிரதான நோக்கமாகும். நாட்டு மக்கள் வழங்கிய மக்களாணை வீணடிக்கப்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.- என்றார்.





