கொழும்பில் இன்றும் பல உணவகங்கள் மூடப்பட்டன நாட்டில் தொடர்ந்தும் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு நிலவுவதால், கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் உணவகங்கள் மூடப்பட்டிருக்கின்றன. நாட்டில் கடந்த கடந்த இரு வாரங்களாக டீசலுக்கு தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில், கடந்த ஒரு வார காலமாக சமையல் எரிவாயுவுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகின்றது. எவ்வாறாயினும்,எதிர்வரும் மூன்று நாட்களுக்கு தேவையான எரிவாயு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது. இலங்கை கடற்பரப்பில் நங்கூரம் இடப்பட்டுள்ள மூன்று கப்பல்களில் ஒன்றுக்கான டொலர் கட்டணங்கள் செலுத்தப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து எரிவாயுவை தரை இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்றன. இதற்கமைய நேற்றுமுதல் எரிவாயு வினியோகிக்கப்பட்டு வருவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்திருக்கிறது. வைத்தியசாலைகள்,தொழிற்சாலைகள், உணவகங்கள் உள்ளிட்டவற்றுக்கு சமையல் எரிவாயு விநியோகத்தின் போது முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், இந்தக் கப்பலில் 3600 எரிவாயு காணப்படுவதாகவும், இலங்கையின் நாளாந்த எரிவாயு தேவை ஆயிரத்து 100 மெட்ரிக் தொன்கள் ஆகும். அதற்கமைய,எதிர்வரும் மூன்று நாட்களுக்கு தேவையான எரிவாயு மாத்திரமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என்பது முக்கியமான விடயமாகும்.
கடந்த ஒரு வாரமாக நாடளாவிய ரீதியில் உள்ள பல உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.
கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களில் தங்கி தொழில் புரிவோர் உணவைப் பெற்றுக் கொள்வதில் பெரும் நெருக்கடிகளை எதிர் கொண்டுள்ளனர்.
அத்தோடு வாடகை கட்டடங்களில் ஓட்டல்களை நடத்துபவர்கள் வியாபாரம் இன்மையின் காரணமாக வாடகை கட்டணத்தை செலுத்துவதில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டு உள்ளதாக ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.
எனினும் கிராமப்புறங்களில் வாழும் மக்கள் விறகு அடுப்புகளில் சில உணவுகளை தயாரித்து சமைத்து விற்பனை செய்து வருகிறார்கள். இதேவேளை எரிபொருளுக்கான தட்டுப்பாடு எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் நீங்கும் என வலு சக்தி அமைச்சு தெரிவித்திருக்கின்றது. இதுவரையில் இரு கப்பல்களில் இருந்தும் டீசலை இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைய குறித்த இரண்டு கப்பல்களில் இருந்தும் 45 ஆயிரம் மெற்றிக் தொன் இறக்கப்பட்டுள்ளதுடன், இன்னும் 20 ஆயிரம் தொன் டீசல் இறக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.






