கல்முனை தமிழ் பிரதேச செயலகத்திற்கு கணக்காளரை நியமிப்பதில் சட்ட சிக்கல்! – சமல்

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்திற்கு உடனடியாக கணக்காளர் ஒருவரை நியமிப்பதற்கு சட்ட ரீதியிலான சிக்கல் உள்ளதாக அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

கல்முனை தமிழ் பிரதேச செயலகம் உப பிரதேச செயலகமாக காணப்படுகிறது. இதனால் உடனடியாக கணக்காளர் ஒருவரை நியமிப்பதில் சட்ட ரீதியான சிக்கல் நிலை உள்ளது.

இந்த விடயம் தொடர்பில் எல்லை நிர்ணய சபைக்கு பாரப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் இது குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.

எல்லை நிர்ணய சபையின் தீர்மானத்திற்கு அமைய, எந்த தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேநேரம், கல்முனையில் முழு அதிகாரத்துடன் கூடிய பிரதேச செயலகத்தை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இது குறித்து முன்னதாக தாம் வழங்கிய உறுதி மொழியினை காப்பாற்றும் எண்ணத்துடனேயே தொடர்ந்தும் செயற்படுவதாக அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதன்போது, குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், அவ்வாறெனில் தற்காலிகமாக பதில் கணக்காளர் ஒருவரையாவது நியமிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில், குறித்த யோசனை தொடர்பில் ஆராய்வதாக அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ளஸ் நிர்மலநாதன் ஒத்திவைப்பு வேளை பிரேரணையை கொண்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply