அரசாங்கம் பெற்றுக் கொண்ட வாக்குகள் வெறும் இலக்கங்களாக மாத்திரமே உள்ளன. அதிகாரம் எதிர்க்கட்சிகளிடமே உண்டு என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள சுதந்திர கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசாங்கம் கூறுவது பொய் என்பது தமக்கு தெரியும் என்பதை மக்கள் இந்த தேர்தலில் உணர வைத்திருக்கின்றனர்.
பாராளுமன்றத்தில் 159 பெரும்பான்மையைக் கொண்டுள்ள இந்த அரசாங்கத்துக்கு மக்கள் இந்த செய்தியை வழங்கியிருக்காவிட்டால் அடுத்த 4 ஆண்டுகளுக்கும் இவர்களின் பொய்கள் தொடர்ந்திருக்கும். எவ்வாறிருப்பினும் மக்கள் அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றனர்.
தற்போது அரசாங்கம் பெற்றுக் கொண்ட வாக்குகள் வெறும் இலக்கங்களாக மாத்திரமே உள்ளன. அதிகாரம் எதிர்க்கட்சிகளிடமே உண்டு.
164 உள்ளுராட்சிமன்றங்களில் மாத்திரமே அரசாங்கத்துக்கு ஆட்சியமைக்க முடியும். 170 மன்றங்களில் அரசாங்கத்தால் ஆட்சியமைக்க முடியாது.
ஜே.வி.பி. செயலாளர் டில்வின் சில்வா வேறு எந்த கட்சிகளின் ஆதரவும் தமக்கு தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளார். அவர்கள் கோரினாலும் ஆதரவளிப்பதற்கு நாம் தயாராக இல்லை என்பதை டில்வின் சில்வாவிடம் தெரிவித்துக் கொள்கின்றோம்.
பொய் கூறி மக்களை ஏமாற்றும் உங்களுடன் இணைய வேண்டிய தேவை எமக்கில்லை. ஆனால் கட்சி பேதங்களை மறந்து சகல எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து 170 உள்ளுராட்சிமன்றங்களை அமைப்பதற்கு நாம் தயார். என்றார்.