வவுனியாவில் வறுமைக் கோட்டிற்குட்பட்ட நிலையில் மூன்று பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினரால் 2 மில்லியன் ரூபாய் செலவில் வீடு நிர்மாணிக்கும் நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வன்னி இராணுவ பாதுகாப்புப் படைத் தலைமையகத்தினால் மில்லியன் ரூபாய் செலவில் குறித்த வீடு நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.
யுத்தம் காரணமாக வெளி மாவட்டத்திலிருந்து வவுனியாவிற்கு இடம்பெயர்ந்து 15 வருடங்கள் கடந்துள்ள போதும், நிரந்தர காணி மற்றும் வீடு இன்றி தாண்டிக்குளம் பகுதியில் வாடகை வீட்டில் சாமிகண்ணு சாந்தா என்ற பெண் தனது கணவர் மற்றும் அவரது மூன்று பிள்ளைகளுடன் வசித்து வருகின்றார்.
கணவர் முச்சக்கரவண்டி சாரதியாக பணியாற்றுவதுடன், சாமிகண்ணு சாந்தா வன்னி பூட்சிட்டியில் பணியாற்றி வருகின்றார்.
எனினும் இவர்களின் வருமானம் அன்றாட செலவுக்கு மாத்திரமே போதுமானதாக அமைந்திருந்ததுடன் நிரந்த காணி வாங்கவோ, வீடு கட்டவோ அவர்களால் முடியவில்லை.
இவர்களின் வறுமை நிலமையினை அறிந்த வன்னி இராணுவ பாதுகாப்புப் படைத் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சம்பக்க ரணசிங்கவினால் கிராம சேவையாளரின் உதவியுடன் இராசேந்திரகுளம் பகுதியில் காணியினை பெற்று அதனை சுத்தம் செய்து இராணுவத்தினரின் உதவியுடன் 2 மில்லியன் ரூபாய் பெறுமதியான வீட்டினை நிர்மாணிக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளார்.
தற்போது அதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதுடன், ஏனைய கட்டுமாண நடவடிக்கைளும் இராணுவத்தினரால் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வன்னி இராணுவ பாதுகாப்புப் படைத் தலைமையகத்தினால் வன்னி பிரதேசத்தில் இதுவரையில் 58 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வீடற்றவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.









