
யாழ்ப்பாணம், மார்ச் 10
திருநெல்வேலி ஆலயத்தில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 09 பெண்களின் விளக்கமறியலை வரும் 23 ஆம் திகதி வரை நீடிக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி பகுதியில் உள்ள விநாயகர் ஆலயம் ஒன்றில் கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற தேர்த்திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களிடம் நகைகளை திருடிய கும்பல் ஒன்று பெண்களிடம் சங்கிலியை அபகரித்தனர்.
சங்கிலிகளை பறிகொடுத்த பெண் அது தொடர்பில் ஆலய நிர்வாகத்திடம் தெரிவித்ததை அடுத்து கோப்பாய் பொலிஸுக்கு தகவல் வழங்கினர். அதன் போது சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆலய வளாகத்தில் நடமாடிய சில பெண்களை விசாரித்த வேளை அவர்கள் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் என இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து 09 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
அதன் போது அவர்கள் தங்கள் கொழும்பு உள்ளிட்ட வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் என கூறியுள்ளனர். அவர்களை பரிசோதனை செய்த வேளை அவர்களில் ஒருவரின் உடைமையில் இருந்து சங்கிலி ஒன்று மீட்கப்பட்டது.
அதேவேளை குறித்த கும்பலை ஆலயத்திற்கு அழைத்து வந்து இறக்கி விட்ட முச்சக்கர வண்டி இரண்டினை அடையாளம் கண்டுள்ளனர். அதன் அடிப்படையில் முச்சக்கர வண்டி சாரதிகளை பொலிஸார் தேடி வருகின்றனர்.
அத்துடன் குறித்த பெண்களுடன் சில ஆண்களும் ஆலயத்திற்கு வந்து இருக்கலாம் எனவும் , சந்தேகம் தெரிவித்தனர்.
09 பெண்களிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , அவர்களை கடந்த 2ஆம் திகதி யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை இன்றைய தினம் 10ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டு இருந்தார்.
இந்நிலையில் வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது , 09 பெண்களின் விளக்கமறியலையும் எதிர்வரும் 13ஆம் திகதி வரையில் நீடிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.





