மூன்று தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு இறுக்கமான கட்டுப்பாடுகள்! ஆ.கேதீஸ்வரன்

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 04ம் திகதி முதல், மூன்று தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளாதவர்கள் பொது இடங்கள் மற்றும் வேலைத்தளங்களுக்கு செல்ல முடியாது என்பதனை கவனத்திற் கொள்ள வேண்டுமென வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன்
தெரிவித்துள்ளார்.

மேலதிக தடுப்பூசி வழங்கும் விசேட திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் அனுப்பியுள்ள அறிக்கையிலையே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

கொரோனா தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களில், மேலதிகமாக மூன்றாவது தடவை (Pfizer) தடுப்பூசியை பெற்றுக் கொள்ளவில்லை.

அதனை பெற்றுக்கொள்ளாதவர்களுக்காக 10.03.2022 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் இரு வாரங்களுக்கு, விசேடமாக தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.

யாழ் மாவட்டத்தில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களில், மூன்றாவது மேலதிக தடுப்பூசியை பெற்றுக்கொள்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே அடையாளம் காணப்பட்டுள்ளது.

அவ்வாறான பிரதேசங்களிலேயே அதிகளவு கொரோனா தொற்றுக்கள் மற்றும் மரணங்கள் பதிவாகியுள்ளமை மேலும் அவதானிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, கொரோனா நோயிலிருந்து எம்மை பாதுகாத்துக்கொள்ள சுகாதார பாதுகாப்பு முறைகளை பின்பற்றுவது மட்டுமல்லாது தடுப்பூசியை காலக்கிரமத்தில் பெற்றுக்கொள்வதும் அவசியமாகும்.

எனினும் கவலைக்கிடமான வகையில் யாழ்மாவட்டத்தில் மூன்றாவது மேலதிக தடுப்பூசியை பெற்றுக்கொள்பவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளன.

அந்தவகையில் இதுவரை யாழ் மாவட்டத்தில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களில் முதல் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களில் 25 வீதமானவர்கள் மட்டுமே தமக்குரிய மூன்றாவது தடுப்பூசியினை பெற்றுக்கொண்டுள்ளனர்;.

தொற்று நோயியலாளர்களின் அறிக்கைகளின்படி, கொரோனா வைரசின் காலத்துடன் ஏற்படும் டெல்டா, ஒமிக்ரோன் போன்ற திரிபுகளை தடுப்பதற்கும் இப்பெருந்தொற்று நிலவும் காலத்தினை குறைப்பதற்கும் கொரோனா தொற்றினால் ஏற்படும் கடுமையான நோய்நிலையினை தடுப்பதற்கும் மற்றும் மரணங்களை குறைப்பதற்கும் தடுப்பூசிகளை உரியகாலக்கிரமத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும்.

இத் தடுப்பூசியை பெற்றுக்கொண்ட பின் ஏனைய அனைத்து தடுப்பூசிகளுக்கும் ஏற்படுவது போல ஓரிரு நாட்களுக்கு மெல்லிய காய்ச்சல், உடல் வலி என்பன ஏற்படக் கூடும்.

இவ் அறிகுறிகளை தவிர இத்தடுப்பூசி மூலம் பாரிய உடல் பாதிப்புக்கள் ஏற்பட்டதாக இதுவரையில் ஏதும் பதிவாகவில்லை.

மேலும் இலங்கையில் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை அதி விசேட வர்த்தமானியில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ம் திகதி முதல் இலங்கை பிரஜை ஒருவர் இலங்கை முழுவதற்குமான முறையான அதிகாரியினால் விலக்களிக்கப்பட்டாலொழிய, கொரோனாத்தொற்றுநோய் என்பதற்கெதிராக முழுமையாகத் தடுப்பூசியேற்றப்பட்டுள்ளமைக்கான சான்றிதழ் இன்றி ஏதேனும் பொது இடத்தினுள் பிரவேசித்தலாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே எதிர்வரும் ஏப்ரல் மாதம் 04ம் திகதி முதல் மூன்று தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கும் மற்றும் வேலைத்தளங்களுக்கும் செல்ல முடியாது என்பதனை கவனத்திற் கொள்ளவும்.

இவ் விசேட தடுப்பூசி வழங்கலின் போது தடுப்பூசி ஏற்றும் நிலையங்கள் பற்றிய விபரங்கள் அந்தந்த பிரதேசங்களிற்குரிய சுகாதார வைத்திய அதிகாரிகளினால் அறியத்தரப்படும்.

20 வயதிற்கு மேற்பட்டவர்களில் கொரோனா தொற்றுக்கான சினோபாம் அல்லது ஏதாவது ஒரு தடுப்பூசியை இரண்டு தடவைகள் பெற்றுக்கொண்டவர்கள், தமது தடுப்பூசி அட்டையினை சமர்ப்பித்து தமக்குரிய மூன்றாவது தடுப்பூசியினை (Pfizer) பெற்றுக்கொள்ள முடியும்.

மேற்குறிப்பிட்டவர்கள் இரண்டாவது தடுப்பூசியைப் பெற்று ஆகக்குறைந்தது ஒரு மாத இடைவெளியின் பின்னர் இத் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் இரண்டு தடவைகள் தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களில் கொரோனா தொற்றிற்கு உள்ளானவர்கள், அவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்ட நாளிலிருந்து ஒரு மாத கால இடைவெளியின் பின்னர் இத் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளலாம்.

தடுப்பூசி அல்லது வேறுமருந்துகளிற்கு ஒவ்வாமை உடையவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு யாழ் மாவட்டத்தில் யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் பருத்தித்துறை, ஊர்காவற்துறை, தெல்லிப்பளை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைகளில் இத்தடுப்பூசிகள்; வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அவ்வாறான நிலைமைகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு தடுப்பூசி வழங்கப்படாது திருப்பி அனுப்பப்பட்டவர்கள் மேற்குறிப்பிட்ட வைத்தியசாலைகள் ஏதாவது ஒன்றில் தமக்குரிய தடுப்பூசியினை பாதுகாப்பாக பெற்றுக்கொள்ள முடியும்- என்றார்.

Leave a Reply