யாழ்ப்பாணத்தில் பொன் அணிகளின் போர்: இன்று ஆரம்பமாகி இரு தினங்கள் நடைபெறும்

யாழ்ப்பாணம், மார்ச் 11

‘பொன் அணிகளின் போர்’ என்று வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி – வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணிகளுக்கு இடையிலான பெருந்துடுப்பாட்டப் போட்டி இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகின்றது.

சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் இன்றும் நாளை மறுதினம் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது.

1917ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பெருந்துடுப்பாட்டப் போட்டி 105ஆவது வருடமாக நடைபெறவுள்ளது. அத்துடன், இரு அணிகளும் மோதும் ராஜன் கதிர்காமர் வெற்றிக் கிண்ணத்துக்கான 29ஆவது ஒருநாள் போட்டியும் எதிர்வரும் 18ஆம் திகதியும் இரண்டாவது இருபது – 20 போட்டி எதிர்வரும் 21ஆம் திகதியும் நடைபெறவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், கொரோனா பெரும்தொற்று காரணமாக கடந்த வருடம் இப்போட்டிகள் எதுவும் நடைபெறாத சூழ்நிலையில் சென். பற்றிக்ஸ் கல்லூரி அதிபர் அருட்பணி ஏ. பி. திருமகன் , யாழ்ப்பாணக் கல்லூரி அதிபர் டி. எஸ். சொலமன் மற்றும் கல்லூரி பழைய மாணவர்கள், ஆசிரியர்களின் பெரும்முயற்யால் மீண்டும் சகல போட்டிகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டது.

பொன் அணிகளின் போரில் இதுவரை 33 தடவைகள் சென். பற்றிக்ஸ் கல்லூரியும், 16 தடவைகள் யாழ்ப்பாணக் கல்லூரியும் வெற்றி பெற்றுள்ளன. 32 போட்டிகள் சமநிலையில் முடிவடைந்துள்ளன. 23 போட்டிகளின் முடிவு காணப்படவில்லை.

ஒரு நாள் போட்டியில் 21 தடவைகள் சென். பற்றிக்ஸ் கல்லூரியும் 6 தடவைகள் யாழ்ப்பாணக் கல்லூரியும் வெற்றி பெற்றுள்ளன. இருபது – 20 போட்டியில் சென். பற்றிக்ஸ் கல்லூரி வெற்றி பெற்றுள்ளது.

இந்த வருடம் சென். பற்றிக்ஸ் கல்லூரியின் அணிக்கு ஏ. எவ். டெஸ்வினும், யாழ்ப்பாண கல்லூரி அணிக்கு விஷ்ணுகாந்தும் தலைமை தாங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply