
கொழும்பு, மார்ச் 11
இனவாத சிந்தனையில் இருந்து விடுபட்டு, சகோதார இனங்களை மதிக்கும் பண்பு வரும் வரையில் இந்த அரசாங்கத்தால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற எரிபொருள் நெருக்கடி தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதன்போது சிறீதரன் எம்.பி மேலும் கூறுகையில்,
இப்போதும் இனவாத சிந்தனைக்குள்ளேயே இந்த நாடு இருக்கின்றது. இதனைத் தாண்டி போக முடியவில்லை. குறிப்பாக 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு பிரதேச சபைகளின் உறுப்பினர்களுக்கும் தலா 40 இலட்சம் ரூபாய் ஒதுக்கப்படும் என்று கூறியிருந்தார்.
ஆனால், யாழ்ப்பாணத்தில் உள்ள ஒருவரும், கிளிநொச்சியில் உள்ள அமைச்சர் ஒருவரும், கிழக்கில் உள்ள அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைத்தலைவர்களும் உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்படும் 40 இலட்சம் ரூபாயையும் அவர்கள் சூறையாடி அதனை தாங்கள்தான் தீர்மானிப்போம் என்பதா இந்த நாட்டின் சுபீட்சம்? இதுவா நிதி அமைச்சரின் வரவு – செலவுத் திட்ட உள்ளடக்கம் என்று கேட்கின்றோம். அதனை நியாயமாக உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டும்.
அரசாங்கத்தின் எடுபிடிகளாக இருப்பவர்களே இதனை தீர்மானிக்கின்றோம் என்று கூறினால் சரியா? நீதியான அரசாங்கமாக இருக்க இந்த அரசாங்கம் தயாராக இல்லை. அடிப்படையில் உள்ள இனப்பிரச்னையை தீர்க்க முடியாத இரண்டு வருடங்கள் கடந்தும் ஜனாதிபதியாக உள்ள, அரசாங்கத்தை கொண்டுள்ள சிங்கள இனவாத அரசாங்கத்தால் சகோதர இனங்களை மதிக்கும் பண்பு இல்லாத நிலை வருகின்ற போது, அவர்களால் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது – என்றார்.




