கண்டியில் இரண்டு வாரங்களில் திடீரென டெங்கு பரவல் தீவிரமடைந்துள்ளது. அத்துடன் தேசிய ரீதியில் டெங்கு நோய் பரவலில் கண்டி நான்காவது இடத்தில் உள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் சுரங்க பெர்னான்டோ தெரிவித்தார்.
கண்டியில் டெங்கு ஒழிப்பு கிராமிய சங்கங்களை உருவாக்குதல் தொடர்பான கலந்தரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
கண்டியில் டெங்கு பரவுதலை உடன் கட்டுப்படுத்த டெங்கு ஒழிப்பு கிராமிய சங்கங்களை உருவாக்க உள்ளோம். அதற்கான பணிகளை மத்திய மாகாண சுகாதார திணைக்களம் மேற்கொண்டு வருகிறது.
கடந்த 2023ம் மற்றும் 2024 ம் ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது கண்டியில் டெங்கு பரவும் வேகம் மந்தமாக இருந்த போதும் கடந்த இரண்டு வாரங்களாக அது திடீர் என எழுச்சி பெற்றுள்ளது.
உள்ளூராட்சி சபைகளுக்கான பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டதும் சுகாதார அமைச்சு, மத்திய மாகாண சுகாதார திணைக்களம், உள்ளூராட்சி திணைக்களம் உட்பட பல
நிறுவனங்களை இணைத்து இத்தகைய கிராமிய சங்கங்கள் அமைக்கும் விடயம் மேற்கொள்ளப்படும்.
இதற்காக அரச ஊழியர்கள், பாதுகாப்புத் துறையினர் மற்றும் உள்ளுராட்சி மன்றப் பிரதிநிதிகளின் ஒத்தழைப்பு அதிகளவில் தேவைப்படுகிறது.
எமது மாவட்டத்தைப் பொறுத்தவரையில், கண்டி நகரத்தை உள்ளடக்கிய கோரளை பிரதேச சபைப்பிரிவும் அதனை அண்மித்த யட்டிநுவர பிரதேச சபைப் பிரிவிலுமே இதுவரை அதிகளவு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.
எனவே, கண்டி பெரஹரா போன்றவற்றை நாம் எதிர்நோக்கியுள்ள இக்கால கட்டத்தில் இது தொடர்பில் விழிப்படைய வேண்டியுள்ளது.- என்றார்.

