உலகளவில் உணவுப் பொருட்களின் விலை உயரும்: புடின் எச்சரிக்கை

மாஸ்கோ, மார்ச் 11

உக்ரைன் மீது போர் நடத்தி வரும் ரஷ்யாவுக்கு எதிராக பல்வேறு நாடுகளும் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையில், பன்னாட்டு நிறுவனங்கள் பல ரஷ்யாவில் தங்களின் வர்த்தகம் மற்றும் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.

அதன் தொடர்ச்சியாக அமெரிக்காவை சேர்ந்த மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்களான பெப்சி, கோகோ கோலா, மெக்டொனால்டு மற்றும் ஸ்டார்பக்ஸ் ஆகியவை ரஷியாவில் தங்களின் வர்த்தகத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்திருந்தன. ரஷ்யாவில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் பெப்சி நிறுவனம், அங்கு தனது வர்த்தகத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளதோடு, உக்ரைன் அகதிகளுக்கு தேவையான உதவிகளை வழங்குவோம் என்றது.

அமெரிக்காவின் பிரபல காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸ் ரஷ்யாவில் உள்ள தனது 130 விற்பனை நிலையங்களில் இருந்து கிடைக்கும் லாபத்தை உக்ரைனில் மனிதாபிமான உதவிகளுக்கு வழங்குவதாக கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்திருந்த நிலையில், தனது முடிவை மாற்றி ரஷ்யாவில் உள்ள அனைத்து விற்பனை நிலையங்களையும் தற்காலிகமாக மூடுவதாக கூறியது.

இந்நிலையில், ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் உலகளாவிய உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்கக்கூடும் என்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கூறியுள்ளார். இதுகுறித்து புதின் காணொளி மூலம் நடத்தப்பட்ட அரசாங்க கூட்டத்தில், “ரஷ்யா மற்றும் பெலாராஸ் நாடுகள், உலக அளவில் அதிக அளவு கனிம உரங்களை உற்பத்தி செய்து வருகிறோம்.

எங்கள் பொருட்களை வழங்குவதற்கான நிதி மற்றும் தளவாடங்களுக்கு அவர்கள் தொடர்ந்து சிக்கல்களை உருவாக்கினால் அதன் விலைகள் உயரும், இது இறுதி தயாரிப்பான உலகளவில் உணவுப் பொருட்களை கடுமையாக பாதிக்கும்” என்று கூறினார்.

Leave a Reply