நாட்டில் தற்போது 367 பொருள்களின் இறக்குமதிக்கு தடை!

இலங்கை அரசாங்கத்தால் அத்தியாவசியமற்றவை என்று கருதப்படும் 367 பொருள்களுக்கு இறக்குமதித் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இறக்குமதித் தடைநேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருகின்றது என்று நிதியமைச்சர் பஸில் ராஜபக்சவால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.இலங்கை தற்போது பெரும் அந்நியச் செலாவணிப் பிரச்சினையைச் சமாளிக்க பொருட்களின் இறக்குமதித் தடைகளை விதித்துள்ளது.
அண்மையில், அத்தியாவசியமற்றவை என்று கருதப்படும் 600 பொருள்களின் இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 367 பொருள்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பால் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருள்கள், பட்டர் ஜோக்கட், அன்னாசி, மங்குஸ்தான் மற்றும் பழங்கள், ஆரஞ்சு, அவகாடோ, மீன் பாஸ்தா, நூடில்ஸ், இறைச்சிகள், முட்டை, அப்பிள், திராட்சை, பதப்படுத்தப்பட்ட பழங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், அழகு சாதனப் பொருள்கள், வெளிநாட்டு மதுபானம் மற்றும் பீர் வகைகள், பேரீச்சம்பழம், தண்ணீர், பாதணிகள், இசைக்கருவிகள், விளையாட்டு உபகரணங்கள், வீட்டுப் உபயோகப் பொருள்கள் என்பனவும் அடங்குகின்றன.அத்தியாவசிய சந்தர்ப்பங்களில் மட்டுமே இத்தகைய பொருள்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் அதற்காக சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள இறக்குமதித் தடைகளால் பல பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், பொருள்கள் பலவற்றின் விலைகள் அதிகரித்துள்ளன. தற்போது மேலும் பல பொருள்களுக்கு இறக்குமதித் தடை விதிக்கப்பட்டுள்ள பொருள்களின் விலைகளும் சடுதியாக அதிகரிக்கும் என்றும் தொிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply