புங்குடுதீவில் கரையொதுங்கும் ஆபத்தான பொருட்கள்!மக்களுக்கு வந்த அவசர எச்சரிக்கை!

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு கடற்கரைப்பகுதியில்  பிளாஸ்ரிக்  மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான  மூலப்பொருட்கள் பெருமளவில் கரையொதுங்கி வருகின்றது என்று யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளது.

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தால் அனுப்பிவைக்கப்பட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  

புங்குடுதீவு தெற்கு கடற்கரையோர பகுதி, குறிகட்டுவான், நயினாதீவு மற்றும் நெடுந்தீவு கடற்கரையோர பகுதிகளில் தற்போது பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான மூலப்பொருள்கள்  பெருமளவில் கரையொதுங்கிவருவதாக கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட கடற் சூழல் உத்தியோகத்தர்களினால் அடையாளம் காணப்பட்டு மாவட்டச் செயலகரின்  கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

அடையாளம் காணப்பட்ட பொருட்கள் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான பிரதான மூலப்பொருள் என்பதுடன் இது சூழலுக்கும் மனிதனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. அந்தவகையில் பொதுமக்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் விழிப்புணர்வுடன் நடந்துகொள்வதுடன் இப் பொருட்களை தொடுதல் மற்றும் எடுத்துச்செல்லுதலை தவிர்க்குமாறும் அரசாங்க அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.  

இது தொடர்பில் கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் உதவி முகாமையாளருக்கு அறிக்கையிடப்பட்டுள்ளதுடன் இதனை அப்புறப்படுத்தல் தொடர்பாக உரிய பொறிமுறை எதிர்வரும் நாட்களில் முன்வைக்கப்படும் என்பதனை அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்.- என்றுள்ளது.

Leave a Reply