கச்சத்தீவு ஆலய திருவிழாவில் இந்திய பக்தர்கள் வருகை

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் இந்திய பக்தர்கள் 80 பேர் பங்ககேற்கவுள்ள அதே வேளை ராமேஸ்வரம் மீன் பிடிதுறைமுகத்தில் இருந்து பக்தர்கள் இன்று புறப்படுகின்றனர்.

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே அமைந்துள்ள கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது.

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்றும் மற்றும் நாளையும் கொண்டாடப்படுவதையொட்டி இன்று காலை ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து 80 பக்தர்கள் மூன்று விசைப்படகுகள் மற்றும் ஒரு நாட்டுப்படகில் கச்சத்தீவு புறப்படுகின்றனர்.

அதற்கான முழு ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கச்சத்தீவு செல்லும் இந்திய பக்தர்களை ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் வைத்து சுங்கத்துறை,காவல்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் முழுமையாக சோதனை செய்த பின் படகுகளில் செல்ல அனுமதிக்கின்றனர்.

மேலும்,ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் பக்தர்கள் இரண்டு தவனை கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும், கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை பின் பற்றி கச்சத்தீவு ஆலய திருவிழாவில் கலந்து கொள்ள வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்று மாலை 5 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமான பின்னர் தேர் பவனி, பிராத்தனைகள் நடைபெறும்.

அத்தோடு நாளை காலை இலங்கை இந்திய பங்கு தந்தைகளின் கூட்டு திருப்பலியுடன் திருவிழா நிறைவடைகிறது.

இதற்கான முழு ஏற்பாடுகளையும் யாழ்பாணம் மாவட்டம் நெடுந்தீவு நிர்வாகம் மற்றும் இலங்கை கடற்படை சார்பில் செய்யப்பட்டுள்ளது.

கச்சத்தீவு திருவிழாவில் கலந்துகொள்ள செல்லும் இலங்கை இந்திய மீனவர்களை ஒன்றினைத்து மீனவர் பிரச்சினை குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆலோசனை கூட்டம் ஒன்று நடத்தப்பட உள்ளதாக திருவிழாவில் கலந்து கொள்ள செல்லும் இந்திய மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply