யாழை வந்தடைந்தார் ஐ.நா ஆணையாளர்!

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய  நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க், இன்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார். 

ஐக்கிய  நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் , தனது உத்தியோகபூர்வ விஜயமாக  கடந்த திங்கட்கிழமை (23) இலங்கையை வந்தடைந்தார். 

செம்மணி மனித புதைகுழி விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளின்  உண்மைத்தன்மையை  வெளிப்படுத்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை வரவேண்டும் என்று பல அமைப்புக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

இந்த நிலையிலே ஐ.நா ஆணையாளர் இலங்கைக்கு தனது உத்தியோபூர்வ விஜயத்தை மேற்கொண்டார். இலங்கையை வந்தடைந்த ஆணையாளர் ஜனாதிபதி, பிரதமர்,  அமைச்சர்கள் என பல பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

அத்துடன் இன்று திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினருனும் பிரமுகர்களுடனும் கலந்துரையாடினார். 

அதன்பின்னரே தற்போது யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார். 

செம்மணி மனிதபுதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி கடந்த மூன்று நாட்களாக ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்று வரும் அணையா விளக்குப் போராட்டம் தொடர்பிலும் அங்கு சென்று கலந்துரையாடலில் ஈடுபடுவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply