கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை !

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர  பேருந்து சேவை விரைவில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று  வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் க.மகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் உள்ளதாவது, 

ஏ-9 வீதியில் கொடிகாமம் சந்தியிலிருந்து பரந்தன் சந்திக்கு இடையிலான பகுதிகளைச் சேர்ந்த மக்களும், பாடசாலை மாணவர்களும் தங்களுக்கான போக்குவரத்துச் சேவை சீராகக் கிடைப்பதில்லையென கிளிநொச்சி மாவட்ட அரச அதிபரிடம் முறைப்பாடு வழங்கியுள்ளனர். 

முறைப்பாட்டுக்கு அமைவாக இலங்கைப் போக்குவரத்துச் சபை மற்றும் வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் ஆகியனவற்றுக்கு என்னால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. 

குறுந்தூர பேருந்து சேவை இல்லாத காரணத்தால் இப்பகுதி பயணிகள் நீண்டதூர பேருந்துகளிலேயே பயணிக்க வேண்டும்.  ஆனால் பல நீண்டதூர பேருந்துகள் இப்பகுதியிலுள்ள பயணிகளை ஏற்றாமல்  செல்கின்றன. 

எனவே ஏ-9  வீதியில் சேவையில் ஈடுபடுகின்ற யாழ் – வவுனியா, யாழ் – முல்லைத்தீவு, யாழ் -கிளிநொச்சி, யாழ் – துணுக்காய் வழித்தட பேருந்துகள் அனைத்தும் கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகளை ஏற்றிச் செல்லுதல் கட்டாயம் என கடமையில் இருக்கும் சாரதி, நடத்துநர்களுக்கு அறிவுறுத்தல் வழங்குமாறு இலங்கைப் போக்குவரத்துச் சபை மற்றும் வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் ஆகியனவற்றைக் கோரியுள்ளேன்.- என்றுள்ளது.

Leave a Reply