கச்சத்தீவு இலங்கையின் இறைமையான சொத்து; மீளப்பறிக்க முடியாது! மீன்பிடி அமைச்சர் சந்திரசேகர்

 

இலங்கைக்கு சொந்தமான கச்சத்தீவு, இங்குள்ள இரண்டு கோடி மக்களின் இறைமையான சொத்தாகும், அதை எவராலும் மீளப்பறிக்க முடியாது என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

அண்மையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், கச்சத்தீவு இலங்கைக்கு ஒப்படைக்கப்பட்டதையடுத்து இந்திய மீனவர்கள் அதிக அளவில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கச்சத்தீவு ஒப்பந்தம் தவறான தீர்மானமாக இருந்ததெனவும் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் சந்திரசேகர், 

சர்வதேச சட்டங்களுக்கு அமைவாகவும், சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட நிலையிலேயே இலங்கையிடம் கச்சத்தீவு ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்திய உச்சநீதிமன்றத்தில் கச்சத்தீவை மீட்க முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த வழக்கை தமிழக அரசு நடத்தாமல் கிடப்பில் போட்டுள்ளது என ராமேஸ்வரத்தில் மீனவர்கள், விவசாயிகள் இணைந்து நடத்திய கச்சத்தீவு மீட்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

1974ல் கச்சத்தீவு ஒப்பந்தத்தில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கவும், வலைகளை உலர்த்தவும் உரிமை இருந்தது. 1976ல் ஏற்பட்ட 2வது ஒப்பந்தத்தில் இந்த உரிமைகள் பறிபோனது. 

இதனால் 51 ஆண்டுகளாக இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பல கோடி மதிப்புள்ள படகுகளை இழந்து தவிக்கின்றனர். 

கடந்த 11 ஆண்டுகளில் 3550 மீனவர்கள் கைது செய்யப்பட்டும், 706 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டும் உள்ளன. 

முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம், முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் கச்சத்தீவை மீட்க தீர்மானம் இயற்றியும் மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. 

உச்சநீதிமன்றத்தில் கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி 2008ல் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்தார். 

இதனை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் விட்டதால் இந்த வழக்கு கிடப்பில் உள்ளது. 

பஹல்காம் தாக்குதலை கண்டித்து இந்திய மத்திய அரசு சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இரத்து செய்தது போல் இலங்கையால் தினமும் பாதிக்கப்படும் மீனவர்களை பாதுகாக்க கச்சத்தீவு ஒப்பந்தத்தை இந்திய பிரதமர் மோடி இரத்து செய்ய வேண்டும் என தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply