செம்மணி மனித புதைகுழி பகுதியில் அரசாங்கம் இதுவரை கால் வைக்கவில்லை! ரவூப் ஹக்கீம் குற்றச்சாட்டு

செம்மணி மனித புதைகுழி உள்ள இடத்திற்கு இதுவரையில் அரசாங்கமோ, காணாமல் போனோர் அலுவலகமோ செல்லவில்லை என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் குற்றஞ்சாட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று   உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாம் அனைவரும் கவலையடையும் விடயமொன்று தற்போது இடம்பெறுகின்றது. செம்மணியில் மனித புதைகுழிகள் அகழப்படுகின்றன. தினமும் அங்கு எலும்புக்கூடுகள் மீட்கப்படுகின்றன. 

சிறுவர்கள், குழந்தைகள் தமது விளையாட்டுப் பொருட்களுடன் புதைக்கப்பட்ட கொடூரமான சம்பவம் தொடர்பில் தினமும் தமிழ் பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகள் வெளியிடப்படுகின்றன. 

ஆனால் தெற்கில் மற்றைய பத்திரிகைகளில் இது தொடர்பில் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. எங்கேயாவது ஒரு மூலையில் சிறிதாக குறிப்பிடப்படுகின்றன.

அரச தரப்பில் எவரும் இதுவரையில் அந்தப் பகுதியில் கால் வைக்கவில்லை என்று அங்கு அகழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ள குழுவினர் கூறுகின்றனர்.

இந்த விடயத்தில் அரசாங்கத்தின் பொறுப்பு என்ன? காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தினர் அங்கு சென்றனரா? 

இதேவேளை அநீதிக்கு எதிரான ஜே.வி.பியின்  இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். அது தொடர்பான ஆணைக்குழு அறிக்கைகள் பல உள்ளன. பல்வேறு மனித புதைகுழிகள் மற்றும் துன்புறுத்தல் நிலையங்கள் தொடர்பில் தகவல்கள் உள்ளன. இது தொடர்பில் என்ன செய்கின்றீர்கள். 

அதிகாரங்களை பயன்படுத்த முடியும். அதனை செய்யாமல் இருப்பது ஏன்? உங்களின் தேசப்பற்றாளர்களுக்கு நீங்கள் பயத்துடன் இருக்கின்றீர்கள். என அவர் தெரிவித்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *