கூமாங்குளம் வன்முறை – ஒருவர் பலி – 5 பொலிஸார் காயம் – அடித்து நொருக்கப்பட்ட பொலிஸாரின் வாகனம்!

வவுனியா, கூமாங்குளம் மதுபானசாலை அருகில் ஒருவர்  உயிரிழந்ததைத் தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைச் சம்வத்தில் 5 பொலிசார் காயமடைந்துள்ளதுடன், பொலிசாரின் 3 வாகனங்களும் சேதமடைந்துள்ளன.

வவுனியா, கூமாங்குளம் பகுதியில் நேற்று (11) இரவு வீதியால் மோட்டர் சைக்கிளில் சென்ற ஒருவர் வீதியோரமாக விழுந்து  உயிரிழந்துள்ளார்.  இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் வவுனியா, கூமாங்குளம் பகுதியைச்  சேர்ந்த இராமசாமி அந்தோனிப்பிள்ளை (வயது 58) என்ற குடும்பஸ்தர் என்று தெரியவந்துள்ளது.

கூமாங்குளம் மதுபானசாலைக்கு அருகிலுள்ள வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த நபர் ஒருவரை பொலிஸார்  துரத்திச் சென்றதுடன் மோட்டார் சைக்கிள் சில்லுக்குள் தடியொன்றை வீசித் தடையை ஏற்படுத்தினர். இதனால் நிலைதடுமாறி கீழே வீழ்ந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனை அவதானித்த மக்கள் ஆவேசமடைந்து  பொலிசார் மீதும் பொலிஸாரின் வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதன்போது வானத்தை நோக்கி துப்பாக்கி வேட்டுக்களை நடத்தி பொலிசார் நிலமையை கட்டுப்படுத்தினர்.

பொலிஸாரின் இந்தக் கொலை வெறியாட்டத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என மக்கள் தெரிவித்ததுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை நீண்ட நேரமாகச் சிறைப்பிடித்து வைத்தனர். இதனால் அந்தப் பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டது.

உயிரிழந்தவரின் சடலத்தைப் பொலிஸார் அங்கிருந்து அகற்றுவதற்கு மறுப்புத் தெரிவித்த மக்கள், “நீதவான் இங்கு வரவேண்டும். அவர் வந்த பின்னரே சடலத்தை அகற்ற அனுமதிப்போம்.” என்று தெரிவித்தனர்.  

இதனால் பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. மக்களின் கொதிப்பால் தடுமாறிய பொலிஸார் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.

இந்நிலையில் வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சம்பவ இடத்துக்கு  வருகை தந்து, இந்த மரணத்தைக் கொலை வழக்காகப் பதிவு செய்து அதனுடன் தொடர்புடையை சந்தேகநபர்களை விசாரிப்பதாகத் தெரிவித்ததுடன், சடலத்தை அகற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும்  அங்கு நின்ற மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மக்கள், “பொலிஸார் மீது எமக்கு நம்பிக்கை இல்லை. நீதிவான் இங்கு வரவேண்டும்’ என்று விடாப்பிடியாக நின்றனர் .இதையடுத்துத் திடீர் மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்துக்கு  வருகை தந்து மரணம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தார்.

அதன்பின்னர் மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் சடலம் அந்தப் பகுதியில் இருந்து அகற்றப்பட்டு பொலிஸாரின் வாகனத்தில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply