வடக்கில் தீவக மக்கள் எதிர்கொள்ளும் இடர்கள் தொடர்பில் தனக்குத் தெரியும் எனவும் இந்தப் பிரதேசத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து உங்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு இயன்ற வரையில் முயற்சி செய்வேன் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
நயினாதீவு பிரதேச வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கான புதிய கட்டட திறப்பு விழாவில் விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.
மக்களுடைய பங்களிப்பும் ஒத்துழைப்பும் இருந்தால் எந்தவொரு அபிவிருத்தியையும் எப்படி வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும் என்பதற்கு இந்த மருத்துவமனை வெளிநோயாளர் பிரிவுக் கட்டடம் சிறந்த எடுத்துக்காட்டு எனவும் தெரிவித்தார்.
கடற்படையினர் இந்தக் கட்டடத்தை சிறப்பான முறையில் கட்டி முடித்து ஒப்படைத்துள்ளனர் எனவும் 1991ஆம் ஆண்டிலிருந்து கடற்படையினருடன் பணியாற்றியிருக்கின்றேன் எனவும் அவர்களால் இந்தப் பிரதேசங்களிலுள்ள துறைமுகங்கள் உள்ளிட்ட பல்வேறு புனரமைப்பு அபிவிருத்திப் பணிகள் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி அனுரகுமார அவர்கள் உலக வங்கியினரை வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கப் பணித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், அவர்களும் இந்தப் பகுதிகளை வந்து பார்வையிட்டுச் சென்றிருக்கின்றனர் எனவும் பெரும்பாலும் அடுத்த ஆண்டு அந்த அபிவிருத்திப் பணிகள் ஆரம்பமாகும் எனவும் அவர்களால் தீவகப் பகுதிகளிலுள்ள சில இறங்குதுறைகள் புனரமைக்கப்படும் என எதிர் பார்ப்பதாகவும் அதனூடாக இந்தப் பகுதியின் சுற்றுலாத்துறை மேம்படும் எனவும் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.