அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்புக்கு நாள்பட்ட சிரை நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை வியாழக்கிழமை (17) தெரிவித்துள்ளது.
ட்ரம்பின் கைகளில் ஏற்பட்ட காயம் குறித்த ஊகங்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
அண்மையில் அவரது கால்களில் வீக்கம் ஏற்பட்ட பின்னர் ட்ரம்ப், விரிவான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்தார்.
எனினும், பரிசோதனை எப்போது நடந்தது என்பது தெளிவாகக் கூறப்படவில்லை.
இந்த மருத்துவ பரிசோதனைகளுக்கு பின்னர் அவருக்கு நாள்பட்ட சிரை பற்றாக்குறை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
79 வயதான அமெரிக்க ஜனாதிபதி, தனது உடல் நல ஆரோக்கியம் தொடர்பில் அடிக்கடி புகழ்ந்து வருகிறார்.
அதில் ஒன்றாக அவர், தன்னை “இதுவரை வாழ்ந்தவர்களில் மிகவும் ஆரோக்கியமான ஜனாதிபதி” என்றும் விவரித்துள்ளார்.
நாள்பட்ட சிரை நோய் என்பது கால்களில் உள்ள நரம்புகளில் ஏற்படும் ஒரு நிலை, இதில் நரம்புகள் வீங்கி, முறுக்கியும், விரிவாக்கப்பட்டும் காணப்படும்.
இது சிரை அடைப்பான் பலவீனமாக இருப்பதன் காரணமாக இரத்த ஓட்டம் சீராக இல்லாமல் இருப்பதால் ஏற்படுகிறது.
இதன் விளைவாக கால்களில் வலி, வீக்கம், மற்றும் அரிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.
இந் நிலைமை உலகளவில் 20 இல் ஒருவரை பாதிக்கும் எனவும் கூறப்படுகிறது.