அனபெல்(Annabelle) திரைப்படத்தில் வரும் பேய் பொம்மை மாயமாகியுள்ளதாக இணையத்தில் செய்திகள் வெளிவந்த நிலையில், குறித்த பொம்மையை ஆய்வு செய்த பிரபல அமானுஷ்ய ஆய்வாளர் டான் ரிவேரா மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனபெல் திகில் படம் உலகம் முழுவதும் பிரபலமானது. அமானுஷ்ய சக்திகள் நிறைந்த Annabelle பொம்மை சுற்றி நடக்கும் திகிலூட்டும் சம்பவங்களின் கலவையே இப்படத்தின் கதை.
இந்நிலையில் அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் கண்ணாடி பெட்டிக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த அனபெல் பொம்மை திடீரென மாயமானதாக சமீபத்தில் இணையத்தில் வதந்திகள் பரவின.
பொதுவாக வாரன்ஸ் அக்கல்ட் அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் இந்த பொம்மை, கடந்த மே மாதம் லூசியானாவில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்காக எடுத்துச் செல்லப்பட்டிருந்தது. இதற்கிடையில் பொம்மை காணாமல் போய்விட்டதாக வதந்தி கிளம்பியது. இதை மறுத்த டான் ரிவேரா, இணையத்தில் வெளியான தகவல் அனைத்தும் பொய்யானது என்று தெளிவுபடுத்தினார்.
மேலும், அனபெல் பொம்மை பாதுகாப்பாக இருப்பதாக டிக்-டாக் வீடியோவையும் வெளியிட்டிருந்தார். மேலும் ஒக்டோபரில் இல்லினாயில் நடைபெறவிருந்த ஒரு நிகழ்ச்சியில் அனபெல் பொம்மை பங்கேற்கும் எனவும் அறிவித்திருந்தார்.
ஆனால் அதிர்ச்சியாக, கடந்த ஜூலை 13ஆம் திகதி பென்சில்வேனியாவின் கெட்டிஸ்பர்க்கில் உள்ள ஹோட்டல் அறையில் டான் ரிவேரா உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். விசாரணை அதிகாரிகள் கூறுகையில், “மரணத்தின் காரணம் இன்னும் தெரியவில்லை. சந்தேகத்திற்குரிய எந்த ஆதாரமும் இல்லை. பிரேதப் பரிசோதனைக்குப் பிறகே உறுதி செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவத்துக்குப் பிறகு, இணையவாசிகள் “டான் ரிவேரா மரணத்திற்கு அனபெல் பொம்மை தொடர்புண்டா?” என்ற கேள்விகளை எழுப்பி வருகின்றனர். தற்போது இந்த மரணம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.