புத்தளத்தில் கடந்த பல வாரங்களாக டீசலுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், இன்று முதல் பொற்றோலுக்கும் தட்டுப்பாடு வருகின்றது.
முந்தல், மதுரங்குளி, கற்பிட்டி, புத்தளம் நகரம் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோலும் இல்லை, டீசலும் இல்லை, மண்ணெண்ணையும் இல்லை என்கின்ற பதாதைகளே தொங்கவிடப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
எனினும், தில்லையடி, 10 ஆம் கட்டை, புத்தளம் சுற்றுவட்டம் ஆகிய மூன்று எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மாத்திரம் பெற்றோல் விநியோகம் செய்யப்படுகின்றன.
இதனால், குறித்த பகுதிகளில் கடும் வாகன நெரிசல் காணப்படுவதுடன், போக்குவரத்து பொலிஸாரும் கடமைகளில் ஈடுபட்டு வீதியில் ஏற்பட்டு வரும் வாகன நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் தரித்து நிற்கும் வாகனங்களுக்கு மட்டும் பெற்றோல் விநியோகிக்கப்படுவதுடன், கொள்கலன்களை எடுத்து வருவோர் திருப்பி அனுப்பப்படுவதாக வாகன சாரதிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
எனினும், வாகன நெரிசலை குறைக்கும் நோக்கில் இவ்வாறு கொள்கலன்களுக்கு பெற்றோல் விநியோகிப்பதை நிறுத்தியுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இலங்கையில் கொரோனா பரவல் ஏற்படத் தொடங்கியதற்கு பின்னர் பெட்றோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு எனபனவற்றின் விலை அதிகரித்து வருவதுடன், தட்டுப்பாடும் காணப்படுகிறது.
இன்னும் புத்தளத்தில் டீசலுக்கு தொடர்ந்தும் பெரும் தட்டுப்பாடு காணப்படுவதாக வாகன சாரதிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதனால், காலை, மாலை, இரவு என எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக நீண்ட வரிசையில் வாகனங்கள் வீதியோரத்தில் தரித்து நின்றமையை அவதானிக்க முடிந்தது.
பல பில்லியன் நஷ்டத்தில் எரிபொருள் விநியோகம் செய்து வருவதால், எரிபொருள் விலையை அதிகரிக்க நிதி அமைச்சு அனுமதி வழங்க வேண்டும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் டீசலிக்கும், பெற்றோலுக்கும் தட்டுப்பாடு நிலவி வருகின்றமை விலை அதிகரிப்புக்கான அறிகுறிகளாக இருக்கலாம் என பொதுமக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், எந்த பிரச்சினைகள் வந்தாலும் அதனை பொருட்படுத்தாமல், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு மக்களுக்கு நிவாரணம் வழங்க ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் உள்ளிட்ட அரசாங்கம் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது என நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.








