அமெரிக்க ஜனாதிபதிக்கு ஆதரவாக தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் போராட்டம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தமிழர் இறையாண்மையை மீட்டுத் தந்தால், 50 இலட்சம் கையெழுத்துக்களை திரட்டி நோபல் அமைதி பரிசுக்கு பரிந்துரை செய்வோம் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் தெரிவித்துள்ளது.

வவுனியாவில் அவர்களால் இன்று (21) முன்னெடுக்கப்பட்ட ஆர்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

மேலும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த போராட்டக்காரர் ஒருவர்,

1948முதல் அடுத்தடுத்து வந்த சிங்கள ஆட்சியாளர்களால் எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் பாகுபாடு, நில அபகரிப்புகள், காணாமல் ஆக்குதல்,கொலைகள் என்ற வரையறைக்குள் மாத்திரமே செயற்பட்டது.

அந்தவகையில் பல உலகத்தலைவர்கள் வந்து போய்விட்டனர்.

ஆனால் இன்று ஒரே ஒரு தலைவருக்கு மட்டுமே செயல்பட தைரியமும் தெளிவும் உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பேசும்போது உலகம் அதை கேட்கிறது, சிலர் மரியாதைக்காகவும், மற்றவர்கள் பயத்திற்காகவும் அதனை கேட்கின்றனர்.

ஜனாதிபதி ட்ரம்பிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தால் தமிழர்களுக்கு நீதியை மீட்டெடுக்க முடியும் என்று நாங்கள் நம்புகின்றோம்.

தமிழ் இறையாண்மையை மீட்டெடுக்க அவர் எங்களுடன் நின்றால், உலகெங்கிலும் உள்ள தமிழ் தாய்மார்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர், அவரை நோபல் அமைதி பரிசுக்கு பரிந்துரைக்கும் வண்ணம் ஐந்து மில்லியன் கையெழுத்துக்களை சேகரிப்போம் என உறுதியளிக்கிறோம்.

உலகம் ஒருபோதும் எதிர்பார்க்காத அமைதித் தூதராக ட்ரம்ப் மாறட்டும் என கருத்து தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *