அநுரவின் புதிய கல்விச் சீர்திருத்தம் எமது மாணவர்கள் மீது கரிசனை கொண்டதல்ல – சபா குகதாஸ் குற்றச்சாட்டு!

அநுர குமார தலைமையிலான அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திருத்தமானது எங்களது மாணவர்கள் மீது கரிசினை கொண்டது அல்ல என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

சங்கானையில் நேற்று நடைபெற்ற மாவை சேனாதிராஜாவின் நினைவு அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

அநுர குமார அரசாங்கத்துக்கு வெறுமனே தமிழ் மக்கள் மீதோ, முஸ்லீம் மக்கள் மீதோ, மலையக தமிழ் மக்கள் மீதோ எந்த கரிசினையும் கிடையாது. கரிசனை இருந்திருந்தால் அவர்கள் ஆட்சியைப் பொறுப்பேற்று பத்து மாதங்கள் கடந்து கொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில் எஞ்சி இருக்கின்ற அரசியல் கைதிகளை விடுதலை செய்திருக்கலாம். 

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி நல்லெண்ணத்தை ஏற்படுத்திருக்கலாம். அவர்களால் பிரிக்கப்பட்ட வடக்கு – கிழக்கை மீள இணைத்து நல்லெண்ண வெளிப்பாட்டை ஏற்படுத்தி இருக்கலாம். இவை ஒன்றுமே நடக்காது.

நாங்கள் மீள மீள ஏமாறப்போகிறோமா? அல்லது அவர்களைப் பார்த்து பரவசப்படப் போகின்றோமா என்பதுதான் எங்கள் முன்னால் உள்ள கேள்வி.

இந்த நாட்டுக்குள் நீதி இல்லை. இந்த நாட்டுக்குள் நீதிமன்றத்தின் ஊடாக நீதி கிடைத்திருந்தால் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணபவராஜா நாட்டை விட்டு ஓடி இருக்க வேண்டிய தேவை இல்லை. அதுவே எமக்கு ஒரு சிறந்த உதாரணம்.

செம்மலை நீராவியடியில் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக பௌத்த பேரினவாதம் செய்த அத்தனை அநியாயங்களையும் கண்டுதான் நீதிபதி சரவணபவராஜா தப்பி ஓடினார்.  

உண்மையை கண்டறியுங்கள் என கடிதம் எழுதுவது முட்டாள்தனம். என்னைப் பொறுத்தவரையில் ஒரு சர்வதேச சுயாதீன விசாரணையில் தான் எமக்கான நீதி கிடைக்கப்பெறும்.-  என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *