மாலைத்தீவுக்கு சென்றடைந்த ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு அங்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முய்சுவின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று (28) காலை உத்தியோகபூர்வ பயணமாக மாலைத்தீவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
எதிர்வரும் 30 ஆம் திகதி வரை திட்டமிடப்பட்டுள்ள இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி, மாலைத்தீவு ஜனாதிபதி முய்சுவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.
அத்துடன், இரு தரப்பினதும் பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்துவதனை முன்னிட்டு, பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் பரிமாறிக் கொள்ளவுள்ளார்.
இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கிடையில் முறையான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டு இவ்வருடத்துடன், 60 ஆண்டுகள் பூர்த்தியாகும் இத்தருணத்தில், ஜனாதிபதி திசாநாயக்கவின் மாலைத்தீவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் குறிப்பிடத்தக்கதொரு நிகழ்வாக அமையும்.
இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி வணிக மன்றமொன்றில் உரையாற்றவும், வெளிநாட்டில் வாழும் இலங்கைச் சமூகத்தினரைச் சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி திசாநாயக்கவின் இப்பயணத்தில், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகள் பலர் இணைந்து கொள்ளவுள்ளார்கள்.