தற்போது உலகம் முழுவதும் பேசுபொருளாக இருப்பது தாய்லாந்து கம்போடியா இடையிலான எல்லை மோதல்.
இந்த எல்லை மோதலுக்கு காரணமாக இருக்கும் 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ப்ரே விஹார் கோவிலை யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக கம்போடியா பதிவு செய்ய முயன்றபோது அது தாய்லாந்து கம்போடியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றமாக மாறியது.
இந்த சர்ச்சைக்குரிய கோவிலின் ஒரு சிறிய வரலாறு குறித்து பார்ப்போம்.
11ஆம் நூற்றாண்டில் ப்ரே விஹார் கோவிலின் பிரதான கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் ஒன்பதாம் நூற்றாண்டில் அங்கு உருவாக்கப்பட்ட துறவி மடம் ஒன்றே பிற்காலத்தில் மிகப்பெரிய கோவிலாக கட்டப்பட்டது என்று கோவில் வரலாறு கூறுகிறது.
தொலைதூர இடத்தில் அமைந்துள்ள இந்த யுனெஸ்கோ பாரம்பரிய தளம் நன்கு பாதுகாக்கப்படுகிறது.
மிகச்சிறந்த கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் இந்த கோவில் செதுக்கப்பட்ட கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
தனது பிரதேசத்தில் ப்ரே விஹார் கோவில் இடிபாடுகள் இருக்கும் ஒரு பகுதியை தாய்லாந்து ஆக்கிரமித்துள்ளதாக, சர்வதேச நீதிமன்றத்தில் கம்போடியா புகார் அளித்திருந்தது.
இந்த இடம், கம்போடிய மக்களின் நம்பிக்கைக்குரிய முக்கியமான மத தலம்.
இந்தக் கோவில் யாருக்கு சொந்தம் என்பது குறித்து முடிவெடுக்கவும், 1954 முதல் அங்கு நிறுத்தப்பட்டுள்ள தாய்லாந்து படைகளை திரும்பப் பெற உத்தரவிட கோரியும் சர்வதேச நீதிமன்றத்தை அணுகியது கம்போடியா.
நீதிமன்ற அதிகார வரம்பிற்கு எதிராக தாய்லாந்து முதற்கட்ட ஆட்சேபனைகளை தாக்கல் செய்தது, அவை நீதிமன்றத்தால் 1961 மே 26ஆம் திகதி நிராகரிக்கப்பட்டன.
பின்னர் இந்த விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றம் 1962 ஜூன் 15 அன்று தீர்ப்பு வழங்கியது .
அன்று வழங்கப்பட்ட இறுதித் தீர்ப்பில், 1904ஆம் ஆண்டு பிராங்கோ-சியாமிஸ் ஒப்பந்தம் சர்ச்சைக்குரிய பகுதியை நீர்நிலைக் கோட்டின்படி வரையறுத்ததாகக் கூறியது.
மேலும் கூட்டு எல்லை நிர்ணய ஆணையத்தால் தயாரிக்கப்பட்ட வரைபடத்தின்படி, கம்போடியாவின் எல்லைக்குள்ளேயே கோயில் இருப்பதாகவும் நீதிமன்றம் கூறியது.
ஆனால், இந்த வரைபடத்தை ஏற்க வேண்டிய கட்டாயம் தங்களுக்கு இல்லை என்று தாய்லாந்து வாதிட்டது. மேலும், இந்த வரைபடத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஒருவேளை வரைபடத்தை ஏற்றிருந்தால், தவறான புரிதலில் அது நடந்திருக்கும் என்றும் தாய்லாந்து வாதிட்டது.
ஆனால், தாய்லாந்து உண்மையில் வரைபடத்தை முன்னர் ஏற்றுக்கொண்டதை கண்டறிந்த நீதிமன்றம், கோயில் கம்போடிய பகுதிக்குள் அமைந்துள்ளது என தீர்ப்பளித்தது.
அத்துடன், அங்கு நிறுத்தப்பட்டுள்ள துருப்புக்கள் அனைத்தையும் தாய்லாந்து உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், 1954க்கு பிறகு கோவிலில் இருந்து அகற்றப்பட்ட அனைத்தையும் கம்போடியாவிற்குத் திருப்பி தர வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பில் கூறியது.
இந்நிலையில்தான் எல்லைக்கு அருகே தாய்லாந்து துருப்புக்களைக் கண்காணிக்க கம்போடிய ராணுவம் டிரோன்களை நிறுத்தியபோது மோதல் தொடங்கியதாக தாய்லாந்து கூறுகிறது.
இவ்வாறான சூழ்நிலையிலேயே தாய்லாந்து-கம்போடியா இடையில் மோதல் ஆரம்பமானது.
தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான மோதல் ‘போராக உருவெடுக்கக்கூடும்’ என தாய்லாந்து எச்சரித்துள்ளது.
இந்த மோதலால் இந்த மோதல்களில் குறைந்தது 33 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர்.
இரு நாடுகளுக்கு இடையிலும் பகிரப்பட்ட எல்லையில் ஐந்து நாட்கள் குண்டுவீச்சு மற்றும் ராக்கெட் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக நேற்றைய தினம் மலேசிய பிரதமர் தலைமையில் கோலாலம்பூரில் இரு நாட்டு பிரதமர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.