1000 அஞ்சல் உதவியாளர்களின் சேவைகளை நிரந்தரமாக்கவும், 1000 புதிய அஞ்சல் உதவியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இலங்கை தபால் திணைக்களத்தின் மத்திய அஞ்சல் பரிமாற்ற சேவைகளை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று (29) பிற்பகல் ஆய்வு செய்தார்.
அதன்பின் அவர் கருத்து தெரிவிக்கையில்
சீன மக்கள் குடியரசின் நன்கொடையாகப் பெறப்பட்ட மத்திய அஞ்சல் பரிமாற்ற கட்டிடத்தை நவீனமயமாக்குவதற்கு சீனத் தூதுவருடன் கலந்துரையாடவுள்ளதாகவும், தபால் திணைக்களத்தின் பணியாளர் பற்றாக்குறை மற்றும் போக்குவரத்து சிக்கல்களை தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
தபால் திணைக்களத்தை நவீனமயமாக்கி, வாடிக்கையாளர் திருப்தியை உறுதி செய்யும் வகையில் புதுமையான, திறமையான சேவைகளை வழங்குவது இலக்கு எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
மத்திய அஞ்சல் பரிமாற்றத்தின் மாதாந்த வருமானம் 277 மில்லியன் ரூபாயாக உள்ளதாகவும், இதில் 200 மில்லியன் ரூபாய் கடித பரிமாற்றத்தின் மூலம் கிடைப்பதாகவும், நவீன தொழில்நுட்பத்துடன் கூரியர், பொதி மற்றும் மின்னஞ்சல் சேவைகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை கண்காணிப்பாளர் மனோஜனி நாணயக்கார சுட்டிக்காட்டினார்.

