கிளிநொச்சியில் யானை-மனித மோதலைத் தடுப்பதற்கான விசேட கலந்துரையாடல்!

கிளிநொச்சி மாவட்டத்தில் யானை – மனித மோதலைத் தடுப்பதற்கான முகாமைத்துவ குழுவினை அமைத்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்று  காலை 9.30மணிக்கு நடைபெற்றது.

இலங்கை முழுவதும் அதிகரித்து வரும் யானை-மனித மோதல்களால் ஏற்படும் நெருக்கடிகளை தீர்ப்பதற்கான துரிதமானதும் நன்கு ஒருங்கிணைக்கப்பட்டதுமான நடவடிக்கைகளின் முக்கியத்துவம் பெரிதும் வலியுறுத்தப்படுவதனால், யானை-மனித மோதல்களை முகாமை செய்வதற்கும் அவற்றுக்கான நிரந்தர தீர்வுகளை வழங்குவதற்குமாக மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் உத்தியோகத்தர் குழுவொன்றினை அமைக்குமாறு ஜனாதிபதி செயலகத்தினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமையை குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில், மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்றைய தினம் நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை, பூநகாரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் காட்டுயானைகள் – மனித மோதல் அதிகளவில் காணப்படுகின்றது.

இதன்போது மாவட்டத்தில் நிலவும் யானை-மனித மோதலை தவிர்ப்பதற்கான உபாயமுறைகள் குறித்து முகாமைத்துவ குழுவில் கலந்துரையாடப்பட்டது.

யானை-மனித மோதல்கள் உள்ள பகுதிகளில் சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளின் பங்குபற்றலுடன் பிரதேச செயலர் தலைமையில் விசேட கலந்துரையாடல்களை நடாத்தி தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் குழுக்களை நியமித்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இதற்காக இரனைமடு, அக்கராயன், கல்மடு, பூநகரி  ஆகிய பிரதேசங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.   

மேலும் புதிய யானை வேலிகளை அமைத்தல், விழிப்புணர்வு நடடிக்கைகள், கண்காணிப்பு நடவடிக்கைகள் போன்ற பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர்கள், இராணுவ பொலிஸ் அதிகாரிகள், பூநகாரி பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர், வனஜீவராசிகள் திணைக்களத்தின் பிராந்திய உதவிப் பணிப்பாளர், மாவட்ட அனர்த்த முகாமத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர், கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், கமநல சேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர், வனஜீவராசிகள் வலயங்களின் உத்தியோகத்தர்கள்,  துறைசார் திணைக்கள உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *