வவுனியா மாநகரசபை அமர்வில் -ஊடகவியலாளர்களை விமர்சித்த முதல்வர்!

வவுனியா மாநகரசபை அமர்வில் உறுப்பினர்களை இருத்தி  வைத்து ஊடகவியலாளர்களை விமர்சித்து முதல்வர் சு.காண்டீபன் நேரத்தை வீண் விரயம் செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

வவுனியா மாநகரசபையின் அமர்வு இன்று  காலை 9.30 இற்கு ஆரம்பமாகி இடம்பெற்ற நிலையில் அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மதியம் 2 மணியுடன் சென்ற பின்னர் சபை உறுப்பினர்களுக்கு முதல்வர்  தெரிவித்ததாவது,

எனக்கு வாக்களிக்காதவர்களை நீ பழிவாங்கிறாயா என என்னிடம் பலர் கேட்கிறார்கள். நான் ஒரு நாளும் ஆட்சி அமைப்பதற்காக இதில் உள்ளவர்களுடனோ அல்லது கட்சிகளிடமோ நான் ஆதரவு கேட்டு கதைக்கவில்லை. ஒரு நாளும் கேட்டதில்லை.

ஆனால் என் சார்பானவர்கள் மற்ற 10 பேரிடமும் அவர்கள் சார்ந்தவர்களிடமும் கேட்டார்கள். நான் அரசியல் பழிவாங்கள் செய்ய வேண்டிய அவசியமில்லை.

ஊடகங்களில் கதைக்கும் போது கவனமாக கதைக்கவும். ஊடக சந்திப்பு யார் வைப்பதாக இருந்தாலும் என்னை கூப்பிடுங்கள். நான் பக்கத்தில் இருப்பேன். ஏனெனில் நான் ஒவ்வொருவரும் ஊடக சந்திப்பு வைக்க நான் திருப்பி கூப்பிட்டு வைத்தால் தான் அவர்கள் போடுவினமாம். ஊடகங்களில் பிரசுரிப்பினமாம்.

நான் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். ஊடகங்களுக்கு பதில் கருத்து கொடுத்துக் கொண்டு நேரத்தை வீண் விரயம் செய்ய முடியாது. ஊடக சந்திப்பு வைக்கிறதாக இருந்தால் வைப்பவருக்கு பக்கத்தில் நானும் வந்து இருந்து அதற்கு பதில் கூறிவிட்டு போறேன்.

என்னையும் ஊடக சந்திப்புக்கு அழையுங்கள். ஊடகம் முன் போய் நீங்கள் எங்களைப் பற்றி கதைக்கிறது என்றால் எங்களை கூப்பிட்டு வைத்து கதையுங்கள்.

வவுனியாவில் சுயாதீனமான ஊடகவியலாளர்கள் கொஞ்சப் பேர் தான் உள்ளனர். விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள் தான் உள்ளார்கள். பக்கச் சார்பாக இருப்பதால் மக்களை  குழப்புற விதமான செய்பாடுகளை செய்யாதீர்கள்.

உங்களை இப்படி கதையுங்கள் என்று கூறிவிட்டு எடுக்கும் ஊடகவியலாளரும் உள்ளனர்.  அப்படி தான் சில சம்பவங்கள் நடந்துள்ளது.

நான் இரண்டு வேலை செய்வதால் 10 மணி ஆகும் வீட்ட செல்ல. உங்கட விசமத்தனமான ஊடக சந்திப்புக்களுக்கு பதில் சொல்ல முடியாது எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *