வவுனியாவில் மாநகர சபைக்கு சொந்தமான ஆதனங்கள் சிலவற்றை சில அமைப்புக்களும் குழுக்கள் மற்றும் தனியார்களின் ஆளுகைக்குட்பட்டுள்ளமையால் அவ்வாறான இடங்களை உடனடியாக மாநகர சபைக்கு கையகப்படுத்தி அதன் உரிமத்துவத்தை பேணுமாறு வவுனியா மாநகர சபை முதல்வர் சு. காண்டீபன் தெரிவித்தார்.
இன்றைய தினம் சபை அமர்வின் போது தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் லக்சனா நாகராஜன் வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா மற்றும் குருமன்காடு பகுதியில் உள்ள கலைமகள் சனசமூக நிலையம் என்பன உட்பட ஒரு சில இடங்கள் சில அமைப்புகளாலும் குழுக்களாலும் கையகப்படுத்தி செயற்படுத்தப்பட்டு வருவதன் காரணமாக மாநகர சபைக்கான வருமான இழப்பு ஏற்படுவதாக தெரிவித்திருந்தார்.
இதனை மாநகர சபை கொண்டு வந்து அதன் வருமானம் மற்றும் செயற்பாட்டை மாநகர சபையே மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கையையும் முன் வைத்திருந்தார்.
இதனை ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அப்துல் லரிப்பும் ஆமோதித்து கருத்து தெரிவித்தார்.
இதன் பிரகாரம் உடனடியாக குறித்த இரண்டு இடங்களுடன் மேலும் மாநகர சபைக்கு உட்பட்ட ஆதனங்களின் பெயரில் மாற்றத்தை உட்படுத்தி அது மாநகர சபையின் பெயரில் அனைத்து ஆவணங்களையும் மாற்றம் செய்து மாநகர சபைக்கு கீழ் கொண்டுவருமாறு முதல்வர் தெரிவித்தார்.
எனினும் இது தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் தற்போதைய மாநகரசபை உறுப்பினரும் கலைமகள் சனசமுக நிலையத்தின் பொருளாளராக கடந்த 29 ஆம் தேதி வரை செயல்பட்டு வந்த வி. விஜயகுமார் குறித்த கலைமகள் சன சமூக நிலையம் அமைந்துள்ள பகுதியானது கடந்த 60 ஆண்டு காலமாக குறித்த சன சமூக நிலையத்தினால் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் அங்குள்ள கட்டிடங்கள் மக்களினால் அமைக்கப்பட்டதாகவும் அதனை பராமரிப்பதற்காக நிதி தேவைப்படுவதன் காரணமாகவே அதனை நிகழ்வுகளுக்கு வாடகைக்கு விடப்படுவதாகவும் தெரிவித்தார்.
எனினும் மாநகர முதல்வர் வாடகைக்கு பெறுபவர்கள் மாநகர சபைக்கும் நிதி செலுத்தி மீண்டும் சன சமூக நிலையத்துக்கும் நிதி செலுத்த வேண்டிய தேவை ஏற்படுவதன் காரணமாக அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட முடியாது எனவும் அது முற்றும் முழுதாக மாநகர சபையினுடைய ஆதனமாக காணப்படுவதனால் அங்கு எவ்வாறான கட்டிடங்கள் இருந்தாலும் அது மாநகர சபைக்கு உரியது எனவும் தெரிவித்து அதனை உடனடியாக மாநகர சபைக்குள் கொண்டுவந்து அங்குள்ள மின்சாரப் பட்டியல் மற்றும் நீர் விநியோகப்பட்டியலிலும் மாநகரசபையின் பெயர் மாற்றம் செய்யுமாறு தெரிவித்தார்.