பொலிஸ் பாதுகாப்புடன் சிறைச்சாலை வாகனத்தில் – சபை அமர்வுக்குச் சென்ற உறுப்பினர்!

பொலிஸ் பாதுகாப்புடன் சிறைச்சாலை வாகனத்தில் வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபை அமர்வுக்கு உறுப்பினர் ஒருவர் அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் ஒன்று வவுனியாவில் பதிவாகியுள்ளது.

சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியின் வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரே இவ்வாறு அழைத்து வரப்பட்டிருந்தார்.

கடந்த 11 ஆம் திகதி வவுனியா, கூமாங்குளம் பகுதியில் இடம்பெற்ற அமைதியின்மை காரணமாக ஒருவர் மரணமடைந்ததுடன், 5 பொலிஸார் காயமடைந்தனர். பொலிஸாரின் இரு உந்துருளிகள், கப் ரக வாகனம் ஒன்றும் சேதமானது.

இச்சம்பவம் தொடர்பில 7 பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தின்போது அப்பகுதியில் மக்களுடன் நின்ற தமிழ் மக்கள் கூட்டணியின் வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் வாக்குமூலம் பெறுவற்காக வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில் கடந்த 14 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார். அவரை எதிர்வரும் 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டநிலையில் அவர் வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபையின் சபை அமர்வுக்காக நீதிமன்ற அனுமதி பெற்று பொலிஸார் மற்றும் சிறைக்காவலர்களின் பாதுகாப்புடன் சிறைச்சாலை வாகனத்தில் அமர்வுக்காக அழைத்து வரப்பட்டு அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டார்.

அமர்வு முடிந்ததும் மீண்டும் அதே வாகனத்தில் அழைத்துச் சென்று சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *