செம்மணியில் 126 எலும்புக்கூடுகள் மீட்பு! அகழ்வுப் பணியின் பின் சான்றுப்பொருட்கள் மீளவும் காட்சிக்கு!

 

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் சனிக்கிழமை புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 05 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் 28 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது

இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி கடந்த 13 ஆவது நாட்களாக முன்னெடுக்கப்படும் நிலையில் இன்றைய தினம்  வரையில் 52 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 37 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதன் போது, இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட 05 எலும்பு கூட்டு தொகுதியுடனுமாக 117 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 126 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் ஸ்கான் பரிசோதனைகள் வருகின்ற திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் முன்னெடுக்கப்பட உள்ளதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார். 

இன்றையதினம் செம்மணியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐந்தாம் திகதி பொதுமக்களுக்கு காண்பிக்கப்பட உள்ள சான்று பொருட்கள் தொடர்பாக காணாமல் ஆக்கப்பட்ட அலுவலகம் தமது கரிசினையை தெரிவித்துள்ளது. குறுகிய நேரத்தில் சான்று பொருட்களை அடையாளம் காண்பது தொடர்பாக சில கருத்துக்களை முன் வைத்துள்ளது.

அதன்படி நீதிமன்றம் சில கட்டளைகளை இன்றைய தினம் பிறப்பித்துள்ளது. குறித்த சான்று பொருட்கள் மீண்டும் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டால் 45 நாட்களின் பின்னர் அகழ்வு பணியில் முடிவடைந்ததும் பிறிது ஒரு நாள் ஒதுக்கப்பட்டு சான்று பொருட்களை காண்பிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று மன்று கட்டளை பிறப்பித்தது.

மேலும் நீதிமன்றம் அது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையை கூறப்பட்டுள்ளதாவது, 

1.சான்று பொருட்களை காட்சிப்படுத்து நடவடிக்கை ஒரு நீதிமன்றத்திற்கு உட்பட்ட நடவடிக்கையாக காணப்படுகின்றமையால் நீதிமன்ற நடவடிக்கைக்குரிய கண்ணியம் இதில் பங்கேற்கும் நபர்களால் பேணப்பட வேண்டும்.

2. காணாமல் ஆக்கப்பட்டு தொடர்பாக முறைப்பாடு செய்த நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அவர்கள் தமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டது தொடர்பான ஆவணம் ஒன்றை சமர்ப்பிப்பது விரும்பத்தக்கது. ஏனைய நபர்களை அனுமதிப்பது தொடர்பில் முற்படுத்தப்படும் தரவுகள் தொடர்பில் தீர்மானிக்கப்படும்.

3.மேற்படி நடவடிக்கைகளில் பங்கு பற்றும் நபர்களின் பெயர், அடையாள அட்டை இலக்கம் அல்லது கடவுச்சீட்டு இலக்கம் அல்லது சாரதி அனுமதிப்பத்திர இலக்கம் உள்ளிட்ட ஏனைய விடயங்கள் நீதிமன்ற உத்தியோகத்தர்களால் பதிவு செய்யப்படும்.

4. 21 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாத்திரம் மேற்படி நடவடிக்கையில் பங்குபற்ற அனுமதிக்கப்படுவார்கள். 

5. பங்குபற்றும் நபர்கள் மேற்படி நீதிமன்ற நடவடிக்கைகளையோ அல்லது காண்பிக்கப்படும் பொருட்களையோ ஒலி, ஒளிப்படங்களை பதிவு செய்வதற்கும் எந்த ஒரு இலத்திரனியல் உபகரணங்களை எடுத்து வருவதற்கும் தடை விதிக்கப்படுகிறது.

6.மேற்படி நடவடிக்கையில் பங்குபெற்றும் காணாமல் போனது உறவினர்கள் சட்டத்தரணி ஒருவருடன் தோன்றவும் நீதிமன்றம் அனுமதி வழங்குகின்றது.

7. இது ஒரு நீதிமன்ற நடவடிக்கையாக காணப்படுவதனால் இங்கு காட்சிப்படுத்தப்படும் உடைகள் உள்ளிட்ட ஏனைய சான்று பொருட்களை தொட்டுப் பார்ப்பதோ, கையால் எடுத்துப் பார்ப்பதோ தடை செய்யப்பட்டுள்ளது.

ஆகவே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்போது  சித்துப்பாத்தி இந்துமயானத்தில் ஊடவியலாளர்கள் எவர்களும் ஒலி, ஒளி பதிவு செய்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். செய்திகள் சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி உள்ளது.

பார்வையிடுபவர்கள் 15 பேராக உள்வாங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டப்பட்டுள்ளன. இன்றைய தினமும் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் இருவருடைய மனித எலும்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *